உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்தில் வில்லனா? கோபிசந்த் தரப்பு மறுப்பு

சூர்யா படத்தில் வில்லனா? கோபிசந்த் தரப்பு மறுப்பு

2026ம் ஆண்டில் 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன்' என மூன்று வெற்றிப் படங்களைத் தந்துள்ளவர் சூர்யா. தற்போது 'ஜெய்பீம்' இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து சூர்யாவின் 49வது படத்தை 'மண்டாடி' படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதை கோபிசந்த் தரப்பு மறுத்துள்ளது. இது குறித்து அவர்களது தரப்பில் வெளியான அறிக்கையில், “எங்கள் நாயகன் கோபிசந்த், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

இதுபோன்ற தவறான மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளைப் பரப்புவதை ஊடக நிறுவனங்களும் சமூக வலைதளப் பக்கங்களும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கோபிசந்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

2001ல் வெளிவந்த 'தொலி வலப்பு' என்ற தெலுங்குப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கோபிசந்த். 2002ல் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தார். அந்தப் படம் தமிழில் ரவி மோகன் நடித்து 'ஜெயம்' என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அப்படத்திலும் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடித்து பின்னர் மீண்டும் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !