வலிமை: வெளிநாட்டு படப்பிடிப்பு ரத்து
ADDED : 1736 days ago
அஜீத் நடிக்கும் வலிமை படம் தொடங்கி ஒரு ஆண்டுக்குமேல் ஆகிவிட்டது. கொரோனா பிரச்சினை, படப்பிடிப்பில் அஜீத்துக்கு ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இதன் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே சென்றது. படத்தின் அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அளவிற்கு படத்தை பற்றிய எந்த தகவல்களும் வெளிவராமல் மந்தமாக இருந்தது.
படத்தின் 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு 60 சதவிகிதம் முடிந்திருந்தது. கொரோனாவுக்கு பிறகு 20 சதவிகிதம் படமானது. இன்னும் 20 சதவிகித படப்பிடிப்பு என்பது கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள்தானாம். கதைப்படி வில்லன் வெளிநாட்டுக்கு தப்பிக்க அங்கு சென்று அவனை அஜீத் பிடிக்கிற மாதிரியான கதை என்பதால் சுவிட்சர்லாந்து நாட்டில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து அதற்கான திட்டமும், அனுமதியும் தயாராக இருந்ததாம்.
ஆனால் கொரோனா வைரசின் இரண்டாவது பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது. இதனால் வலிமை படத்துக்கு வழங்கிய அனுமதியை அந்த நாடு ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இனிமேலும் காத்திருக்க முடியாது என்பதால் வில்லன் ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்வது போன்று கதையை மாற்றி கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ராஜஸ்தானில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.