அம்மாவாக நடிக்கத் தயக்கமில்லை - ஸ்ருதிஹாசன்
ADDED : 1720 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடிப்பதாலோ என்னமோ ஸ்ருதிஹாசன் ஒரு மொழியிலும் தன்னுடைய வெற்றியைத் தொடர்ந்து தக்க வைக்கத் தவறிவிட்டார்.
2017ல் வெளிவந்த சி 3 படத்திற்குப் பிறகு தமிழில் அவர் நடித்து எந்தப் படமும் வரவில்லை. தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
2017க்குப் பிறகு தெலுங்கில் அவர் நடித்த கிராக் படம் கடந்த வாரம் வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது. இப்படம் தமிழில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளிவந்த சேதுபதி படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்கள். படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்களாம்.
இப்படத்தில் ஆறு வயது மகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அது பற்றி அவர் கூறுகையில், “அம்மாவாக நடிப்பது ஒரு ஹீரோயினுக்கு அவரது பயணத்தைப் பாதிக்காது என நினைக்கிறேன். எனது கதாபாத்திரம் சிறப்பானதாகவும், கதையுடன் அது சம்பந்தப்பட்டும் இருந்தால் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை,” எனக் கூறியுள்ளார்.
ஸ்ருதி கூறியிருப்பது குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதை பற்றித்தான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.