ஆரிக்கு வில்லனான அப்பாணி சரத்
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்கிற கேரக்டரில் கவனிக்கத்தக்க வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமானவர் அப்பாணி சரத் என்கிற சரத்குமார். அடுத்து மோகன்லாலுடன் நடித்து ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் பிரபலமான இவர், தமிழில் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், விஷாலின் சண்டக்கோழி-2 ஆகிய படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தில் வெப் சீரிஸில் நடித்தார்.
இந்தநிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளர் என்கிற புதிய அடையாளத்துடன் நடிகர் ஆரி அர்ஜுனா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அப்பாணி சரத். இதில் ஆரி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் சீடரான அபின் ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தப்படத்திற்கான துவக்க விழா பூஜையில் அப்பாணி சரத்தும் கலந்து கொண்டார்.