நேரடியாக டிவியில் ஜி.வி.பிரகாஷ் படம்
கொரோனா தமிழ் சினிமாவையே மொத்தமாக புரட்டி போட்டு விட்டது. ஒரு புறம் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது. மற்றொரு பக்கம் பெரிய பட்ஜெட் படங்கள் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், சின்னத்திரைக்கென்று தயாரிக்கப்படும் படங்களும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படம் சின்னத்திரைக்கென்றே தயாரிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை அன்று ஒளிபரப்பானது. தற்போது அதேபோல ஒரு படம் சத்தமின்றி தயாராகி வருகிறது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு ராஜேஷ் எம்.இயக்த்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இவர்கள் தவிர ஆனந்தராஜ், டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தயாரிக்கும் முன்னணி சேனல், ஏப்ரல் 14 அல்லது மே 1 அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.