மறக்க முடியுமா? - கில்லி
படம் : கில்லி
வெளியான ஆண்டு: 2004
நடிகர்கள்: விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆசிஸ் வித்யார்த்தி
இயக்கம்: தரணி
தயாரிப்பு: ஸ்ரீசூர்யா பிலிம்ஸ்
தில், துாள் வெற்றிக்கு பின், இயக்குனர் தரணியின் அடுத்த ஹாட்ரிக் சிக்ஸர், கில்லி! விஜய்யின் சினிமா பயணத்தில், மாபெரும் வெற்றி பெற்ற, 10க்குள் ஒரு படம், இது.தெலுங்கில் வெளியான, ஒக்கடு படத்தின், 'ரீமேக்' என்றாலும், இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளை, தரணி மாற்றியிருந்தார். மேலும், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
விஜய், அவ்வளவு சுறுசுறுப்பு; அவரை திரையில் பார்த்தவுடன், ரசிகருக்கும் அதே, 'எனர்ஜி' பரவியது. வில்லன் வேடம் ஏற்ற பிரகாஷ் ராஜின், 'செல்லம்' என்ற அவரது குரலும், உடல்மொழியும் பெரும் வரவேற்பு பெற்றது. விசாலமான மொட்டை மாடி, பிரகாஷ் ராஜ் கழுத்தில் கத்தி, கபடிப் போட்டி, மீனாட்சி அம்மன் கோவில் வீதி என, படத்தில் இடம் பெற்ற பல காட்சிகளை மறக்கவே முடியாது. அதுவும் அந்த கலங்கரை விளக்கம், 'செட்' செய்யப்பட்டதாம்; நம்பவே முடியாது. அவ்வளவு நேர்த்தி. வித்யாசாகர் இசையில், பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.
சொல்லி அடித்தது கில்லி!