விக்ரம் பெயர் இடம்பெறாத மஹாவீர் கர்ணா போஸ்டர்
ADDED : 1685 days ago
மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கத்தில் மஹாவீர் கர்ணா என்கிற புராண படத்தில் விக்ரம் நடிப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்தி, தமிழ், மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்தப்படம் தயாராவதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு படத்தை பற்றியே பேச்சே இல்லாமல், இந்தப்படம் கைவிடப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், திடீரென மஹாவீர் கர்ணா படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொண்டு நடித்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார் ஆர்.எஸ்.விமல்.
அந்த பரபரப்பும் சில நாட்களில் அடங்கி விட, தற்போது படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் செய்து சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா என்கிற புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக இந்த போஸ்டரில் நாயகன் விக்ரம் பெயர் இடம்பெறவே இல்லை.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் விக்ரம், கொரோனா தாக்கம் ஏற்படுத்திய இடைவெளி காரணமாக இந்தப்படத்தில் நடிக்க முடியாது என விலகி விட்டதாகவும், அதனால் இந்தியில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரை வைத்து இந்தப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ளார் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் விக்ரம் விலகியது குறித்து இருதரப்பிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.