'த்ரிஷ்யம் 2' உலகத்தரம் - ராஜமௌலி பாராட்டு
ADDED : 1713 days ago
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம் 2' மலையாளப் படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் பாகத்திற்குப் பொருத்தமான இரண்டாம் பாகம் என படத்தைப் பார்த்த பலரும் பாராட்டினார்கள். தற்போது தெலுங்குத் திரையுலகின் முக்கிய இயக்குனரான எஸ்எஸ் ராஜமௌலி படம் குறித்து மிகவும் பாராட்டி படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை தன்னுடைய முகப்புத்தகத்தில் பகிர்ந்த ஜீத்து மிகப் பெரும் பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது ராஜமௌலி, திரைப்பட இயக்குனர். 'த்ரிஷ்யம் 2' படத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்தேன். படம் எனது எண்ணங்களில் மிகவும் உலவியது. அதனால் 'த்ரிஷ்யம்' படத்தின் முதல் பாகத்தை மீண்டும் பார்த்தேன் (த்ரிஷ்யம்' வெளியான போது அதைத் தெலுங்கில் மட்டுமே பார்த்தேன்)
இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு மற்றும் அனைத்துமே மிகவும் அற்புதம் என உறுதியாகச் செல்வேன். ஆனால், எழுத்து உண்மையிலேயே மாறுபட்டு இருந்தது. அது உலகத்தரம் வாய்ந்த ஒன்று. முதல் பாகமே ஒரு மாஸ்டர் பீஸ்தான். இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்துடன் ஒன்றிப் போகும் அளவிற்கான கதை, இறுக்கமான கதை சொல்லல், புத்திசாலித்தனத்திற்குக் குறைவில்லாமல் இருந்தது. இது போன்ற இன்னும் பல மாஸ்டர் பீஸ்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்,” என தன்னுடைய மெசேஜில் ராஜமௌலி தெரிவித்துள்ளார்..