த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு ஓடிடியில் ஏப்ரல் 14ல் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் த்ரிஷா. விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்த 96 படத்திற்குப் பிறகு அவருடைய அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமானது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானார். அந்தப் படங்கள் முடிவடைந்தும் இன்னும் வெளியாகாமலே இருக்கிறது.
சதுரங்க வேட்டை 2, பரமபத விளையாட்டு, கர்ஜனை ஆகிய மூன்று படங்களின் வெளியீடு தாமதமாகி வந்தது. ராங்கி படம் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது பரமபத விளையாட்டு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்கள். வரும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி அப்படம் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தப் படத்தையெல்லாம் த்ரிஷா கண்டு கொள்வதாகவே இல்லை. ஏற்கெனவே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பையும் புறக்கணித்திருந்தார். மேலே குறிப்பிட்ட படங்களில் ராங்கி படத்தை மட்டுமே த்ரிஷா கண்டுகொள்வார் என்கிறார்கள்.