உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு

எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி, பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛எம்.ஜி.ஆர். மகன். அப்பா - மகன் இடையேயான ஒரு சின்ன உரசலை குடும்ப சென்டிமென்ட் நிறைந்த உணர்வுப்பூர்வமாக இப்படத்தை உருவாக்கி உள்ளார் பொன்ராம். இப்படம் வருகிறது ஏப்., 23ல் ரிலீஸாவதாக இருந்தது.


ஏற்கனவே கொரோனா பிரச்னையால் 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நியைலி்ல கொரோனா இரண்டாவது வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நேற்று பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழுநேர ஊரடங்கு விதித்தது. இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் புதிய படங்களின் வெளியீடு தள்ளிப்போகலாம் என நேற்றே சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில் ‛எம்.ஜி.ஆர். மகன் பட ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்கிரீன் மீடிய நிறுவனம் வெளியிட்ட அறிக்கை : எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !