மண்டேலா படத்துக்கு மறுதணிக்கை கேட்டு வழக்கு
யோகிபாபு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் மண்டேலா. அறிமுக இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கி இருந்தார். ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரிதிருந்தார். இந்த படம் கடந்த 4ம் தேதி விஜய் டிவியில் வெளியானது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் யோகிபாபு முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார். கிராமத்து மரத்தடியில் வாழும் அவரை அந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கும், குறிப்பாக கழிவறை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். வீட்டின் பின்வாசல் வழியாகத்தான் அவரை அனுமதிப்பார்கள்.
இதனை ஆட்சேபித்து தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மருத்துவர் சமுதாயம் மதிப்பு மிக்க சமுதாயமாகும். அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்றும் ஊர் மக்கள் அவரை செருப்பால் அடிப்பது போன்றும் மண்டேலா படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை தணிக்கை குழு அனுமதித்துள்ளது.
இது மருத்துவ சமுதாயத்தை மக்களை இழிவுபடுத்துவதாகும். எனவே மண்டேலா படத்தை மறுதணிக்கை செய்து இந்த காட்சிகளை நீக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.