உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: சங்க தலைவர் எச்சரிக்கை

தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: சங்க தலைவர் எச்சரிக்கை

தற்போது கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. இனி தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே. அதை நாங்கள் வரவேற்கிறோம். தியேட்டர்கள் மூடப்பட்டதும் சரியான நடவடிக்கை தான். கடந்த முறை 10 மாதங்கள் வரை தியேட்டர் மூடப்பட்டு கிடந்தது. அப்போதும் நாங்கள் சொத்துவரி, தொழில்வரி, குறைந்தபட்ச மின்கட்டணத்தை செலுத்தி வந்தோம். எங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாமல் சம்பளம் கொடுத்து வந்தோம்.

இந்த நிலையில் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவால் பாதிக்கப்படும் மற்ற தொழில்களுக்கு சலுகைகள் வழங்குவதை போன்று தியேட்டர்களுக்கும் வழங்க வேண்டும். சொத்துவரி, வருமானவரி, தொழில்வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மின்கட்டணத்தில் சலுகை தர வேண்டும். கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி போன்றவற்றில் சலுகை வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே தியேட்டர்கள் மீண்டும் இயங்கும். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தியேட்டர்கள் திறக்க அனுமதித்தாலும் இந்த சலுகைகள் இல்லாவிட்டால் தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !