தெலுங்கு 'த்ரிஷ்யம் 2' படமும் ஓடிடி ரிலீஸ் தான்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க மலையாளத்தில் உருவான 'த்ரிஷ்யம் 2' படம் தியேட்டர் வெளியீட்டைப் புறக்கணித்து ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை உடனடியாக தெலுங்கில் ரீமேக் செய்ய ஆரம்பித்தனர். தெலுங்கிலும் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா ஜோடி இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஆரம்பித்தனர்.
40 நாட்களில் படப்பிடிப்பை முடித்து தற்போது இறுதிக்கட்டப் பணிகளைச் செய்து வருகின்றனர். தெலுங்கிலும் இப்படம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என தகவல் பரவி உள்ளது.
தற்போதுள்ள கொரோனா சூழலால் தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு படத்தை ஓடிடியிலேயே வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.