'வலிமை' அப்டேட்டுக்குப் பதில் டிரெண்டாகும் 'அஜித் 61' அப்டேட்
வினோத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை, அஜித் பிறந்த தினமான மே 1ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அதைத் தள்ளி வைத்துவிட்டனர். அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அஜித் பற்றி ஏதாவது ஒரு விஷயத்தை டுவிட்டரில் டிரெண்டிங்கில் ரசிகர்கள் கொண்டு வருகின்றனர்.
தற்போது 'தல 61' என்ற அப்டேட்டை டிரெண்டிங்கில் விட்டுள்ளனர். 'நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களுக்குப் பிறகு மீண்டும் வினோத் - அஜித் கூட்டணி இணைய உள்ளதென்றும், அதுதான் 'தல 61'வது படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித்திற்கு ஒரு இயக்குனரை அதிகம் பிடித்துவிட்டால் அவர்களுடன் தொடர்ந்து படங்களைச் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதன்படி சரண், சிவா வரிசையில் இப்போது வினோத்தும் இணைவாரா என்பது விரைவில் தெரிய வரும்.