உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கே.வி.ஆனந்த் மறைவு - திரைபிரபலங்கள் இரங்கல்

கே.வி.ஆனந்த் மறைவு - திரைபிரபலங்கள் இரங்கல்

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்திற்கு திரையுலகினர் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெரும் அதிர்ச்சி அடைந்தேன் - ஷங்கர்
கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்தபோது இயக்குனர் ஷங்கரின் முதல்வன், பாய்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் ஷங்கரின் நல்ல நண்பரும் கூட. கே.வி.ஆனந்தின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ஷங்கர், ‛‛பெரும் அதிர்ச்சி அடைந்தேன். என் இதயம் கனக்கிறது, வலிக்கிறது. என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். அற்புதமான ஒளிப்பதிவாளர், அட்டகாசமான இயக்குனர் கேவி. இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உங்கள் ஆன்மா சாந்தியடைட்டும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள், அனுதாபங்கள்'' என பதிவிட்டுள்ளார்.

நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் - தனுஷ்
தனுஷின் அனேகன் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார். கே.வி.ஆனந்த் மறைவுக்கு டுவிட்டரில் தனுஷ் வெளியிட்ட இரங்கல் பதிவு : “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். மிகவும் சீக்கிரமாக அவர் சென்றுவிட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

கார்த்தி இரங்கல்
நடிகர் கார்த்தி டுவிட்டரில், ‛‛சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அதிர்ச்சியானேன்'' என பதிவிட்டுள்ளார்.

அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில், ‛‛மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உங்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் சார். ரொம்ப சீக்கிரமாகவே சென்றுவிட்டீர்கள். அவரின் அன்புக்குரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்'' என தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி டுவிட்டரில், ‛‛அதிர்ச்சியும், மிகவும் வருத்தமும் அடைந்தேன். உங்களின் ஆன்மா சாந்தியடையட்டும் கேவிஆனந்த் சார். உங்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்'' என பதிவிட்டுள்ளார்.

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு டுவிட்டரில், ‛‛மிகவும் நல்ல மனிதர். மென்மையாக பேசும் பண்பாளர். எண்ணிலடங்கா திறமை கொண்டவர். அவரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியானேன். அவரின் குடும்பத்தினருக்கு இதை தாங்கும் வலிமையை ஆண்டவன் கொடுக்கட்டும். கே.வி.ஆனந்த் அவர்களின் அயன் படம் எனக்கு மிகவும் பிடித்தது'' என பதிவிட்டுள்ளார்.

விஷால்
விஷால் டுவிட்டரில், ‛‛இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியானேன். என மனது முற்றிலும் நொறுங்கியது. இது எளித்தில் ஜீரணிக்க கூடியது அல்ல. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவரின் ஆன்மா சாந்தியடைட்டும். என் முதல்படமான செல்லமே படத்தின் ஒளிப்பதிவாளர் கேவி.ஆனந்த் அவர்கள் தான்'' என பதிவிட்டுள்ளார்.

ஏஜிஎஸ்., நிறுவனம்
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இரங்கல் செய்தி : ‛‛ஏஜிஎஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை இன்று நாங்கள் இழந்து நிற்கிறோம். கே.வி.ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும், மிகச்சிறந்த இயக்குநரும் ஆவார். முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர், ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !