நயன்தாராவின் கூழாங்கல்லுக்கு விருது
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார். இதில் நயன்தாராவும் பங்குதாரராக இருக்கிறார். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், தயாரித்து முடித்து வெளியிட முடியாமல் தவிக்கும் படங்களை வாங்கி அதை வெளியிட்டும் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள். இதன்மூலம் நயன்தாராவும் இதன் தயாரிப்பாளர் ஆகிறார். இந்த படம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல்.
இதையடுத்து நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டது. அங்கு கூழாங்கல் படம் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. இது குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவு பற்றிய கதை.