ஓடிடி தளம் ஆரம்பிக்கும் ராம்கோபால் வர்மா
கொரோனா தொற்று கடந்த வருடம் ஆரம்பமான போது ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தன. டிவியில் பார்த்த படங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த மக்கள் ஓடிடி தளங்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பினர்.
அதனால், இந்தியாவில் இருக்கும் சில முன்னணி ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் ஆகியவை புதிதாக பல சந்தாதாரர்களை தங்கள் பக்கம் இழுத்தன. அவற்றோடு நம் நாட்டைச் சேர்ந்த சன் நெக்ஸ்ட், ஜீ 5, ஆஹா உள்ளிட்ட தளங்களும் போட்டி போட ஆரம்பித்தன.
தமிழ்த் திரையுலகிலும் சிலர் சொந்தமாக ஓடிடி தளங்களை ஆரம்பித்தார்கள். ஆரம்பித்ததோடு அவை என்ன ஆனதென்று அவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.
தெலுங்குத் திரையுலகத்தின் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா கடந்த வருடம் சில சிறிய படங்களைத் தயாரித்து வேறு ஓடிடி நிறுவனங்களிலும், இணைய தளங்களிலும் வெளியிட்டார். தற்போது அவரே 'ஸ்பார்க்' என்ற புதிய ஓடிடி தளத்தில் ஆரம்பித்துள்ளார். வரும் மே 15ம் தேதி முதல் அது ஆரம்பமாக உள்ளது.
அந்த புதிய ஓடிடி தளத்திற்கு தெலுங்கு, ஹிந்தி சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரைப்படங்கள், வெப் சீரிஸ், டாக் ஷோ ஆகியவை இந்த ஓடிடி தளத்தில் வர உள்ளது.