கொரோனாவால் திருமணத்தை ஒரு வருடம் தள்ளி வைத்த மெஹ்ரின்
கிருஷ்ணா காடி வீர பிரேம கதா என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் மெஹ்ரின் பிரதிஸ்டா. அதன்பிறகு மாகானுபாவடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அப்படியே சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் அந்த படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது தனி கதை. அதன்பிறகு தெலுங்கு படங்களில் பிசியான மெஹ்ரின் சிறிய இடைவெளிக்கு பிறகு தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தார்.
மெஹ்ரினுக்கு கடந்த மார்ச் மாதம் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அதோடு மெஹ்ரினுக்கும், அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரும் தற்போது அதற்கு சிசிக்சை பெற்று வருகிறார்கள். இதனால் திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மெஹ்ரின் கூறியதாவது: கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம். விரைவில் மாற்று திட்டம் பற்றி அறிவிக்கப்படும். இப்போது நானும் எனது வருங்கால கணவரும் தொலைபேசி வாயிலாக ஒருவரை ஒருவர் பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்றார்.
மெஹ்ரின் தற்போது எப்3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் வெங்கடேஷ், வருண்தேஜ், தமன்னா ஆகியோரும் நடிக்கிறார்கள். அனில் ரவிபுடி இயக்குகிறார். இதுவே மெஹ்ரின் நடிக்கும் கடைசி படம் என்று அவர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.