கொரோனா 2வது அலை : சம்பளத்தைக் குறைப்பார்களா ஹீரோக்கள் ?
கொரோனா முதலாவது அலை கடந்த வருடம் பரவிய போது நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், உதயா, இயக்குனர்கள் ஹரி, அஜய் ஞானமுத்து, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட சிலர் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால், அவர்களைத் தொடர்ந்து வேறு எந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் யாரும் சம்பளக் குறைப்பு பற்றி அறிவிக்கவில்லை.
கடந்த ஒரு வருட காலமாக திரையுலகம் கொரோனாவுக்கு முந்தைய பழைய நிலையை அடைய போராடி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையால் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால், பெரும் நிதிச்சுமைக்குத் தயாரிப்பாளர்கள் ஆளாகியுள்ளனர்.
தியேட்டர்களை மீண்டும் திறக்கும் வரை அவர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற காத்திருக்க வேண்டும். கடந்த வருடம் சில நடிகர்கள் அறிவித்த சம்பளக் குறைப்பைப் போலவே, அடுத்து வெளியாக உள்ள பல படங்களின் நடிகர்களும் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்களிடம் உள்ளது.
அப்படி குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் குறைத்துக் கொண்டால் தான் தற்போது ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தயாரிப்பாளர்கள் சமாளிக்க முடியும். செயல்பாட்டில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கங்கள் கடந்த வருடத்திலிருந்தே அந்த கோரிக்கையை வைத்து வருகின்றன. ஆனால், நடிகர்கள், நடிகைகள் தரப்பிலிருந்து அதற்கான அறிவிப்புகள் வரவில்லை. இப்போதாவது அவர்கள் குறைத்துக் கொண்டால்தான் ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும் அது நன்மை பயக்கும் என்கிறார்கள்.