‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'திரௌபதி 2'. மோகன்ஜி இயக்கி உள்ளார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படம் நாளை (ஜன.,23) வெளியாகிறது. இன்று இப்படத்தின் சிறப்பு காட்சி, பத்திரிகையாளர்கள், பா.ஜ., மூத்த நிர்வாகி எச். ராஜா, நடிகை கஸ்தூரி, நடிகர் ரஞ்சித், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோருக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் பத்தியாளர்களை சந்தித்தனர்.
எச்.ராஜா கூறியதாவது: இந்த படம் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்க வேண்டிய காவியத்தை படமாக எடுத்திருக்கிறார். ஆப்கானியர் சுல்தான்கள் டில்லியை ஆக்கிரமித்து 13 மதத்தை மாற்ற முயற்சித்தனர். நூறு ஆண்டு காலமாக அவர்களுக்கு நம் பாரதம் அடிமையாக இருந்தது. சொர்ண காமாட்சி அது மேல தான் அன்னியர்கள் கண்ணாக இருந்தனர். சுல்தானுடைய ஆட்சியில் தான் இந்து பெண்கள் மிக மோசமாக அவமதிக்கப்பட்டனர். அதை தான் படத்தில் காண்பித்துள்ளார். இதை கண்டிப்பாக பாடமாக வைக்க வேண்டும். அலாவுதீன் கில்ஜியை நேசிக்கிறேன் என்று சொன்னால் தேச துரோகி என்பேன். இஸ்லாமியர்களாக இருந்தாலும் இந்த நாட்டை நேசித்து தான் ஆக வேண்டும். பாபர் அந்நியன்; அவரை ஆதரித்தால் அவர்கள் தேச துரோகி தான். எது தேசம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛ஒரு பாகுபலி போன்ற படத்தை எளிதான பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். அதில் மோகன் ஜி வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரைக்கும் திரெளபதி என்ற பெண்ணை மையப்படுத்தி எடுத்துள்ளனர். இந்த படம் அரசியல் தாண்டி நல்ல முயற்சி. சனாதனத்தை ஒழிக்க முயற்சி செய்கின்றனர் 700 வருடங்களாக இன்னவரை ஒழிக்க முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை ஒழிக்க முடியாது. சென்சார் போர்டில் பா.ஜ.,வை சார்ந்தவர்கள் மட்டுமில்லை திமுகவை சார்ந்தவர்களும் என பலர் உள்ளனர். சென்சார் போர்டு பா.ஜ.,வின் கைப்பாவை இல்லை.
துணை முதல்வர்
ஜனநாயகன் படத்திற்கு தமிழகத்தில் இருந்துதான் எதிர்ப்பு வந்தது. சினிமா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது தான். இப்போது சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்களை எடுக்கிறார்கள். விஜய் விசில் சின்னம் தான் கேட்பார் என ஒரு வருடத்திற்கு முன்னாடியே நான் கூறிவிட்டேன். பிகில் என்ற படத்தில் இருந்து எடுத்து இருப்பார்கள். திமுகவை ஒழிக்க அதிமுகவுடன் சேர்ந்து விஜய் பயணம் செய்ய வேண்டும். பவன் கல்யாண் மாதிரி துணை முதல்வர் ஆக நினைக்க வேண்டும்'' எனக் கூறினார்.
இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், ‛‛இப்படம் நாளை 300 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறது. முதல் முறையாக வரலாற்று படம் எடுத்துள்ளோம். நம் முன்னோர்கள் எப்படி நம் நாட்டைக் காத்தனர் என்பதை எடுத்துரைக்கும் படம். ஒருவேளை இந்த படம் ரிலீஸ் செய்யவில்லை என்றால் மங்காத்தா படத்திற்கு சென்று இருப்போம். இதுவரை என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதேனும் ஒரு சர்ச்சை இருக்கும். ஆனால் தற்போது இந்த படத்திற்கு வரவில்லை. இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை'' என்றார்.