ஆண் குழந்தைக்குத் தாயான ரிச்சா
ADDED : 1582 days ago
சிம்பு கதாநாயகனாக நடித்த ஒஸ்தி, தனுஷ் கதாநாயகனாக நடித்த மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. அந்த இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு விலகியவர் அதற்கடுத்த வருடம் சில தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றுவிட்டார்.
அங்கு அமெரிக்கரான ஜோ லாங்கெலா என்பவரை 2019ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தாய்மை அடைந்த ரிச்சாவிற்கு கடந்த மே மாதம் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
தன்னுடைய குழந்தை புகைப்படங்களை வெளியிட்டு குழந்தையின் பெயர் லுகா ஷான் லாங்கெலா என்றும் அறிவித்துள்ளார் ரிச்சா. குழந்தை பார்ப்பதற்கு அப்படியே அப்பா போல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது தாய்மையைப் பற்றியும் அம்மா என்பதின் பெருமையையும் தனது நீண்ட பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சினிமாவே வேண்டமென ஒதுங்கி மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்று, படிப்பை முடித்து, பெரிய கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, காதல் திருமணம் முடித்து, அம்மா ஆன ரிச்சாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சினிமாவுக்குரிய சுவாரசியமான அம்சங்கள் அனைத்தும் உள்ளன. புகழில் இருக்கும் போதே சினிமாவை விட்டு ஒருவர் விலகுகிறார் என்பதெல்லாம் தற்போது நடக்குமா ?.