தி பேமிலி மேன் 2 - சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா
தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தி பேமிலி மேன் 2' படத்தில் நடித்ததற்காக நடிகை சமந்தா சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக மனோஜ் திவாரி 10 கோடி ரூபாயும், சமந்தா 3 அல்லது 4 கோடி ரூபாயும், பிரியாமணி 80 லட்ச ரூபாயும் சம்பளம் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
சமந்தா ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக அதிகபட்சமாக 1.5 கோடி தான் வாங்குவாராம். ஆனால், ஒரு வெப் தொடருக்காக இரண்டு மடங்கு சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவை விட வெப் தொடர்களில் அதிக சம்பளம் கிடைத்தால் நடிகைகள் பலரும் அதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமீப காலங்களில் காஜல் அகர்வால், தமன்னா, வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பில்லாமல் போனால் தான் டிவி தொடர்கள் பக்கம் போவார்கள். ஆனால், இப்போது சினிமாவில் வாய்ப்பிருந்தாலும் அதிக சம்பளம் காரணமாகவே முன்னணி நடிகைகளும் வெப் தொடர்கள் பக்கம் போகிறார்கள் என திரையுலகத்தில் சொல்கிறார்கள்.