தமிழில் தற்போது அதிகப் படங்களில் நடிக்கும் நடிகை யார் ?
தமிழ் சினிமா படப்பிடிப்புகள் எப்படியும் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பமாகிவிடும் என்ற நம்பிக்கையில் திரையுலகினர் இருக்கிறார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்புகள் இரவு, பகலாக நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழில் தற்போதுள்ள நிலவரப்படி அதிகப் படங்களில் விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களது சில படங்கள் முடிந்திருந்தாலும் வெளியீடு தாமதமாகி வருகிறது.
நடிகைகளைப் பொறுத்தவரையில் பிரியா பவானி சங்கர் தான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். “கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, ஹாஸ்டல்” ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், இந்தியன் 2, ருத்ரன், பத்து தல, ஹரி இயக்கும் படம் என கைவசம் 9 படங்களுடன் முன்னணியில் இருக்கிறார். மேலும் சில படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இவருக்கு அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். “பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம்” ஆகிய ஆறு படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் கணக்கில் இருக்கின்றன. இவை தவிர மூன்று தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
தமிழில் தற்போதும் நம்பர் 1 நடிகை என சொல்லப்படும் நயன்தாரா அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஓடிடி வெளியீடு என்று சொல்லப்படுகிறது.
அண்ணாத்த, சாணி காயிதம் ஆகிய படங்களில் மட்டும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்து வருபவர், மலையாளத்தில் மரைக்கார், தெலுங்கில் குட் லக் சகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
காஜல் அகர்வால் நடித்து முடித்த பாரிஸ் பாரிஸ் படம் முடிந்து மூன்று வருடங்களாகியும் எப்போது வரும் என்று தெரியவில்லை. தமிழில் இந்தியன் 2, ஹே சினாமிகா, மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துள்ளார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் டாக்டர் படத்தில் மட்டும் நடித்து முடித்துள்ள அறிமுக நாயகி பிரியங்கா அருள் மோகன் அடுத்து டான், சூர்யாவின் 40வது படம் ஆகியவற்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சின்னத் திரையிலிருந்து வந்து ஓ மை கடவுளே மூலம் பிரபலமான ஓடிடி வெளியீட்டில் இரண்டு படங்களில் நடித்த வாணி போஜன் தற்போது பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். “பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திறவா, விக்ரமின் 60வது படம், சூர்யா தயாரிக்கும் ஒரு படம் என மற்ற நடிகைகளுக்குப் போட்டியாக களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்காத தமன்னா, தெலுங்கில் தான் பிஸியாக உள்ளார். அங்கு மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் லாபம் படத்திலும், ஹன்சிகா மஹா படத்திலும் நடித்து முடித்துள்ளார்கள். சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட சில நடிகைகள் வாய்ப்பில்லாமல் இருப்பதும், சிலர் ஓரிரு படங்களில் மட்டுமே நடிப்பதும் ஆச்சரியமாக உள்ளது.
கடந்த ஒரு வருட கொரானோ பாதிப்பு சினிமாவை அதிகம் பாதித்துள்ளது. அது சில நடிகைகளின் சினிமா வாய்ப்பையும் தட்டிப் பறித்துள்ளது.