உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியை வில்லனாக்கத் துடிக்கும் இயக்குனர்

விஜய் சேதுபதியை வில்லனாக்கத் துடிக்கும் இயக்குனர்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தெலுங்கில் 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்தார். அப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் வெற்றியும், அதற்கு முன்பு விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'மாஸ்டர்' படத்தின் வெற்றியும் விஜய் சேதுபதிக்கும் தெலுங்கில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

அதனால், தெலுங்கு இயக்குனர்கள் விஜய் சேதுபதியை தங்களது படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்துவிட்டார்.

அடுத்து 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடிக்க உள்ள படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.

தெலுங்குத் திரையுலகத்தில் வில்லன் நடிகர்களுக்கு நிறையவே பஞ்சம் உள்ளது. அதே சமயம், வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்க வைக்கும் போது அந்தப் படங்களை பான்-இந்தியா வெளியீடாக வெளியிடும் போது அது உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறார்களாம்.

அதே சமயம் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதை தமிழ் இயக்குனர்கள் விரும்பவில்லை என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதனால், அவரை நாயகனாக வைத்து தமிழில் படமெடுக்கும் போது அது கர்நாடகா, கேரளா மாநில வியாபாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !