டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் வாழ்க்கை சினிமா ஆகிறது
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடன ஆளுமை சரோஜ்கான். 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்தவர். பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரின் வீட்டுக்குள்ளும் எந்த முன் அனுமதியும் இன்றி செல்லக்கூடிய ஒரே நபர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு என்று கூட சொல்வார்கள்.
அதிதிராவ் நடித்த சிருங்காரம் படத்திற்கு நடனம் அமைத்தார். இந்த படத்திற்காக சரோஜ்கானுக்கு தேசிய விருது கிடைத்தது. இதுதவிர மேலும் இரு இந்தி படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சரோஜ்கான் நடனம் அமைத்த இந்தி பாடலான ஏக் தோ தீன் பாடல் இன்றளவும் பேசப்படுவதாக இருக்கிறது. மாதுரி தீட்சித், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களின் ஆஸ்தான நடன இயக்குனராக இருந்தார்.
கடந்த ஆண்டு சரோஜ்கான் மரணம் அடைந்தார். தற்போது அவரது வாழ்க்கை சினிமா ஆகிறது. இதனை அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று அவரது மகனும், நடன இயக்குனருமான ராஜூகான் அறிவித்துள்ளார். சரோஜ்கானாக நடிக்க பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார் ராஜூகான்.