உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட வழக்கு ரத்து

ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட வழக்கு ரத்து

சென்னையை சேர்ந்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியையோ, லாபமோ தரவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரஹ்மான் தர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரஹ்மான் லாபம் அடைந்ததாகவும மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு நடைபெற்று வந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத் நிகழ்ச்சி நஷ்டம் ஏற்பட்டதற்கும், தங்களுக்குகும் சம்பந்தம் இல்லை என்றும், நிகழ்ச்சிக்காகப் பேசிய தொகையைக் கூட மனுதாரர் தரவில்லை என்றும் போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர், இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்சினை முடிந்துவிட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞரிடம் உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உமாசங்கரும், தனக்கு மனுதராரரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !