பல சோதனைகளை கடந்து வந்தேன், இதையும் கடந்து வருவேன் : ஷில்பா ஷெட்டி
ADDED : 1543 days ago
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கணவர் கைது செய்யப்பட்டது குறித்து எந்தவித கருத்தும் சொல்லாமல் பல நாட்களாக அமைதி காத்து வந்த ஷில்பா ஷெட்டி தற்போது மவுனம் கலைத்திருக்கிறார்.
அதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் எழுதிய ஒரு புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரிகளை மேற்கோள் காட்டி அந்த பதிவினை போட்டுள்ளார். அதாவது, நடந்து முடிந்ததை நினைத்து கோபம் கொள்ளாதே, நடக்கப்போவதை நினைத்து பயம் கொள்ளாதே. ஆனால் நடந்து வருவதில் விழிப்புடன் இரு என்று எழுதியிருக்கிறார்.
மேலும், நம்மை காயப்படுத்தியவர்களை நினைத்து கோபப்படுவோம். எதிர்காலத்தில் நடக்கப்போவதை நினைத்து தேவையில்லாத பயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்வோம். ஆனால் அது தேவையில்லை. அவர் எழுதியதைப்போன்று நடந்ததை நினைத்து கோபத்தை காட்டுவதோ அல்லது வருத்தப்படுவதோ தேவையில்லை. நடப்பதில் தெளிவாக இருப்போம். என்னுடைய கடந்த காலங்களில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளேன். அதேபோல் இதையும் கடந்து வருவேன். நான் எனது வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவுமே தடையாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.
6மணிநேரம் விசாரணை
இந்நிலையில் ஆபாச பட வழக்கில் தொடர்பு குறித்து மும்பை போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் புறநகர் ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றனர். ராஜ் குந்த்ராவை அழைத்துக் கொண்டு அவரது பங்களாவுக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சோதனை நடத்தினர். அதன்பின் விசாரணை நடந்தது.
சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்ததில் ஷில்பா ஷெட்டியின் பங்கு என்ன என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டியின் பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜ் குந்த்ரா நடத்தும் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அலுவலகம் தான் ஆபாச பட தயாரிப்புக்கான மையமாக இருந்த நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி திடீரென்று கடந்த ஆண்டு விலகியது ஏன்? என விசாரிக்கப்பட்டது.