நண்பர் ஜெயராம் மகனுக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசனும், நடிகர் ஜெயராமும் நெருங்கிய நண்பர்கள் என்பது சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றே. 1989ம் ஆண்டு மலையாளத்தில் கமல்ஹசான் நாயகனாக நடித்து வெளிவந்த 'சாணக்யன்' படத்தில் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள்.
அதன் பின் தமிழில் 'தெனாலி, பஞ்ச தந்திரம், உத்தம வில்லன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயராம் தன் மகன் காளிதாஸை 'ஒரு பக்கக் கதை' படத்தின் மூலம் நாயகனாக நடிக்க அறிமுகம் செய்த போது அதற்கான விழாவில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் முன் காளிதாஸை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன் தான்.
'ஒரு பக்கக் கதை' பல்வேறு காரணங்களால் மிகவும் தாமதமாகி கடந்த வருடம் தான் ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழில் இன்னும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் காளிதாஸ்.
அதனால், காளிதாஸுக்கு தான் தயாரித்து நடிக்கும் 'விக்ரம்' படத்தில் தன் மகனாக நடிக்க வாய்ப்பளித்துள்ளாராம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.