ஆர்ஆர்ஆர் - 5 மொழிகளில் பாடப் போவது யார்? யார்?
ADDED : 1571 days ago
ராஜமவுலி இயக்கத்தில் கீரவானி இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறப்புப் பாடலை உருவாக்கி உள்ளார்கள்.
இப்பாடல்களை 5 மொழிகளிலும் பிரபலமான பாடகர்களைப் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் கீரவானி. தமிழில் இவரை மரகதமணி என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
தமிழ்ப் பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாடுகிறார். இவரைப் பற்றித் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். தெலுங்குப் பாடலை வேடால ஹேமச்சந்திரா பாடுகிறார். இவர் தெலுங்கில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளவர். சமீபத்தில் வெளிவந்த வக்கீல் சாப் படத்திலும் பாடியிருக்கிறார்.
மலையாளப் பாடலை விஜய் யேசுதாஸ் பாடுகிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவரது பல பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. கன்னடத்தில் யாசின் நிசார் பாடுகிறார். இவர் தெலுங்கு, கன்னடப் படங்களில் பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஹிந்தியில் அமித் திரிவேதி பாடுகிறார். இசையமைப்பாளரான இவர் தெலுங்கு, ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்து வருபவர்.
தெலுங்குப் பாடலை ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி, தமிழ்ப் பாடலை மதன் கார்க்கி, ஹிந்திப் பாடலை ரியா முகர்ஜி, கன்னடப் பாடலை ஆசாத் வரதராஜ், மலையாளப் பாடலை மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இன்று காலை இந்த அறிவிப்பிற்கான வெளியீட்டு போஸ்டரில் ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவானியுடன் 5 மொழிப் பாடகர்களும் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
நட்பு என தமிழிலும் அதே அர்த்தத்தில் மற்ற மொழிகளிலும் இப்பாடலுக்கான தலைப்பையும் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பாடலை ஆகஸ்ட் 1ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்கள்.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது.