உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மவுன மொழி பேசும் திரையரங்குகள் : வாழ்வாதாரம் இழக்கும் ஊழியர்களின் குடும்பங்கள்

மவுன மொழி பேசும் திரையரங்குகள் : வாழ்வாதாரம் இழக்கும் ஊழியர்களின் குடும்பங்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, திரையரங்குகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கிறது. அதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. திரையரங்கு உரிமையாளர்களுக்கோ பராமரிப்பு செலவு, கோடியை தாண்டிக் கொண்டிருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடியதால், ஏப்., - மே மாதங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில்நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டன. எப்போதும் போல் கடைகள் நடத்தப்படுகின்றன. ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகள் அறிவித்திருந்தாலும், அவற்றை கடந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கமான பணிகளை செய்யத் துவங்கி விட்டனர். 100க்கு, 85 சதவீதத்தினர் முக கவசம் அணிகின்றனர். மீதமுள்ளோர் அலட்சியமாக இருக்கின்றனர்.

ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் அதிகமானோர் அமர்ந்திருப்பர்; இடைவேளை சமயத்தில் ஒரே ஹாலில் அருகருகே கூடி நிற்பர்; பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவர் என்பதால், தொற்று பரவ வாய்ப்பிருப்பதாக, சுகாதாரத்துறையினர் அச்சப்படுகின்றனர். அதேநேரம் கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்தபோது, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கு திறக்க, அப்போதைய தமிழக அரசு அனுமதி அளித்தது. துரதிர்ஷ்டவசமாக, அப்போது புதிய திரைப்படங்கள் வெளியிடாததால், திரையரங்கு பக்கம் வர, ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இரண்டாம் அலை பரவ ஆரம்பித்ததில் இருந்து, பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடப்பதால், ஊழியர்களின் குடும்பங்கள் நிர்கதியாய் நிற்கின்றன. திரையரங்கு உரிமையாளர்கள், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களின் நஷ்டக் கணக்கு கோடியை தாண்டி விட்டது. சில திரையரங்கு உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு, 50 சதவீத சம்பளத்தை வழங்கி வருகின்றனர். சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதால், ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை இருக்கிறது. பல ஊழியர்கள், அடிப்படை தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.


மீண்டு வர ஒரே வழி
திரையரங்கு உரிமையாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தாலும், பராமரிப்புக்காக, 15 முதல், 20 ஊழியர்கள் தேவை. ஏ.சி., புரொஜக்டர்கள், இருக்கைகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். வருவாய் இல்லாவிட்டாலும், 15க்கும் மேற்பட்ட ஊழியர்களை நியமித்து, பராமரிப்பு பணி செய்கிறோம். அவர்களுக்கான மாத சம்பளம் தொடர்ந்து வழங்குகிறோம். வேலை இல்லாத ஊழியர்களுக்கு, 50 சதவீத சம்பளம் கொடுக்கிறோம். ஊரடங்கு பிறப்பித்ததில் இருந்து இதுவரை, திரையரங்கு உரிமையாளர்களுக்கு, ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, அரசு அனுமதி அளித்தால் மட்டுமே மீண்டு வர முடியும், என்றார்.

கூலி வேலைக்குச் செல்கிறேன்
திரையரங்கு ஊழியர் சாமிநாதன் கூறுகையில், குடும்பத்தை விட்டு, வெளியூரில் இருந்து வந்து, இங்கு தங்கி, வேலை பார்க்கிறேன். தியேட்டரில் பணிபுரிந்தால் கிடைக்கும் வருமானத்தை, குடும்பத்துக்கு அனுப்ப வேண்டும். தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், கூலி வேலைக்குச் செல்கிறேன். மாதம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை. 10 அல்லது, 15 நாட்களுக்கே வேலை கிடைக்கிறது. தெரிந்தவர்கள், நண்பர்களின் உதவியால், காலத்தை ஓட்டி வருகிறேன். நான் மட்டுமல்ல; திரையரங்குகளில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களின் நிலைமையும் இதுவே. திரையரங்குகளை திறக்காவிட்டால், எங்கள் நிலை என்னாகும் என தெரியவில்லை. கட்டுப்பாடுகளுடன் திரையரங்கை மீண்டும் திறக்க, அரசு அனுமதித்தால் மட்டுமே, எங்களைப்போல் உள்ள குடும்பங்கள் பிழைக்க முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !