தியேட்டர்களில் ‛தலைவி : செப்., 10ல் ரிலீஸ் என அறிவிப்பு
ADDED : 1508 days ago
விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் ‛தலைவி. ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. கொரோனாவால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். அதேசமயம் ஓடிடி வெளியீட்டிற்கு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேப்போன்று கேரளா தவிர்த்து ஆந்திரா, தெலுங்கானாவிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தை வருகிற செப்., 10ல் தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் இன்னும் திறக்கவில்லை, இருந்தாலும் ஹிந்தி பேசும் பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் அதை கருத்தில் கொண்டு படத்தை வெளியிடுகின்றனர். ஒருவேளை செப்., 10க்குள் மகாராஷ்டிராவிலும் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என தெரிகிறது.