மன அழுத்தத்தில் இருந்து விடுதலை : போலீஸ்க்கு நன்றி சொன்ன ஆர்யா
இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா என்பவர் நடிகர் ஆர்யா 70லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார். சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தவிவகாரத்தில் ஆர்யா தன் தரப்பு விளக்கத்தை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா, “சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். இந்த வழக்கு எனக்கு நீண்ட நாட்களாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தது. என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.