அண்ணாத்த மோஷன் போஸ்டர் கலக்குது... வசனம் அனல் தெறிக்குது...!
ADDED : 1502 days ago
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. தீபவாளி வெளியீடு என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. திருவிழா பின்னணியில் கோயில் மணிகள், அரிவாள்கள் நிறைந்து இருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவும் வெளியானது. அதில் ‛‛நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க, தொடங்குது ஓம்கார கூத்து என ரஜினியின் அனல் தெறிக்கும் வசனம் பேசுகிறார். கூடவே ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்கில் ரஜினி பயணம் செய்வது போன்றும் கையில் அரிவாள் ஏந்தியபடியும், வீடியோவின் கடைசியில் கோபத்துடன் ரஜினி நடந்து செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். வெளியான 15 நிமிடங்களிலேயே யு-டியூப்பில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது. ஜனரஞ்சகமான குடும்ப படமாகவும், ஆக் ஷன் படமாகவும் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது.