சந்திரமுகி 2-வில் நடிக்க சம்மதம் சொல்வாரா அனுஷ்கா?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு அவருடைய பிரபலம் இன்னும் அதிகமானது. வட இந்தியாவிலும் தெரிந்த நடிகையாக மாறினார். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் தெலுங்கில் மட்டும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. கடந்த வருடம் அனுஷ்கா நடித்து ஓடிடியில் வெளிவந்த 'சைலன்ஸ்' படம் வரவேற்பைப் பெறவில்லை.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை அனுஷ்கா. இதனிடையே, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'சந்திரமுகி 2' படத்தில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருவதாக கோலிவுட், டோலிவுட்டில் தகவல் பரவியது.
ஆனால், இதுவரையிலும் அது குறித்து எந்த ஒரு சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறாராம் அனுஷ்கா. அவரிடம் ராகவா லாரன்ஸே தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்கிறார்கள். படத்தில் ராகவாவிற்கு அவர் ஜோடி இல்லையாம். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த தனி கதாநாயகி கதாபாத்திரமாம். அதனால், அனுஷ்காவின் சம்மதம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது படக்குழு.