மேக்னா ராஜ் மறுமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
கன்னட சினிமாவின் இளம் நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்தாண்டு திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரின் திடீர் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை தான். காதல் சொல்ல வந்தேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக்பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதாமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு பிரதாம் தனது சமூக ஊடகங்களில் பதிலளித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் கன்னட மொழியில் இது குறித்து டுவீட் செய்துள்ள பிரதாம், நான் இதை புறக்கணிக்க நினைத்தேன்!! ஆனால் இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. யூடியூப் சேனல்கள் பார்வைகள் மற்றும் பணத்திற்காக தரம் குறைவாக இருக்கும்போது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன். இதுபோன்ற வீடியோக்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்போது மற்ற சேனல்களுக்கு அது ஒரு பாடமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.