இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா பாலு என அழைக்கப்படும் எஸ்பிபி எனும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல் டிஸ்கோ கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்தாண்டு ஆக., 5 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. உடல்நிலை தேறி வந்த நிலையில் செப்., 25ல் மறைந்தார். அவர் மறைந்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946ல் ஜுன் 4ல் -எஸ்.பி.சாம்பமூர்த்தி என்பவருக்கு மகனாக தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காளகஸ்தியில் எஸ்எஸ்எல்சியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் பியுசியும் முடித்து, ஜேஎன்டியு காலேஜ் ஆப் என்ஜினியரிங்கில் பி.இ படிப்பதற்காக சேர்ந்தார். உடல் நிலை பாதிப்பால் படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து ஏஎம்ஐஇ பிரிவில் சேர்ந்து படித்தார்.
இசை பயணம்1968 ஆம் ஆண்டு நடந்த அனைத்து கல்லூரி போட்டியில் இவர் பாடிய பாடலைக் கேட்ட மறைந்த ஓவியர் பரணி, இவரை இயக்குநர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைக்க, அவர் மூலம் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனை சந்தித்து, அவரிடம் சில பாடல்களை பாடி காட்டியிருக்கிறார் எஸ்.பி.பி. தமிழ் தெரியுமா என்று எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்பிபி.,யைப் பார்த்து கேட்க தனக்கு பேசத் தெரியும் படிக்க தெரியாது என்று கூறியிருக்கின்றார்.
ராமு திரைப்படத்தின் நிலவே என்னிடம் பாடலைக் கூட அவர் தெலுங்கில் எழுதி வைத்துத் தான் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பாடி காண்பித்திருக்கிறார். உனக்கு நான் பாட வாய்ப்பு தருகிறேன், தமிழை நன்றாக கற்றுக் கொள் என்ற எம்எஸ்வியின் அறிவுரைப்படி, தமிழை நன்றாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். எம் எஸ் விஸ்வநாதன் தான் கூறிய படியே இவருக்கு ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பின்னணிப் பாடகி எல்ஆர்ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் அந்தப் படம் ஏனோ வெளியாகவில்லை.
முதல் வாய்ப்புஅதன் பின் எம்எஸ்விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் பி.சுசிலாவுடன் இணைந்து இயற்கை என்னும் இளைய கன்னி... என்ற பாடலை பாடி தமிழ் திரையுலகின் பின்னணி பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இவர், பாடிய முதல் தமிழ் பாடல் சாந்தி நிலையம் படத்தில் என்றாலும் முதலில் வெளிவந்தது அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற ‛ஆயிரம் நிலவே வா படப் பாடல் தான். எப்படி எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரு டிஎம்.சௌந்தர்ராஜனோ. அதுபோல் அடுத்த தலைமுறை கதாநாயக நடிகர்களான ரஜினி, கமல்ஹாசனுக்கு இவருடைய குரலே மிகப் பொருத்தமானதாக மாறியது.
1976 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப் பின் இவருடைய திரையிசைப் பயணம் ரெக்கை கட்டி பறந்தது என்றே சொல்ல வேண்டும். இளையராஜா என்ற இசை ஜாம்பவானின் கைவண்ணத்தில் ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்களை பாடி ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழ் திரையிசை ரசிகர்களை தன் குரலால் வசீகரித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் இவர் பாடிய முதல் பாடல் பாலூட்டி வளர்த்த கிளி என்ற படத்தில் எஸ்.ஜானகியோடு இணைந்து பாடிய நான் பேச வந்தேன் என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆரில் தொடங்கி இன்றைய இளம் கதாநாயக நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று அனைவருக்கும் பாடி இருக்கிறார் என்றால் இவரது குரலுக்கு முதுமை என்பதே இல்லை என்றே அர்த்தம்.
பன்முக கலைஞர்பன்முகத் தன்மை வாய்ந்த இந்தப் பாடகர் பாடல்கள் மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என அனைத்திலும் முத்திரை பதித்த ஒரு சாதனையாளர். சிகரம், கேளடி கண்மணி, குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், ரட்சகன், பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்பிற்கு சான்றாகவும், ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த துடிக்கும் கரங்கள் மற்றும் இவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த சிகரம் என்ற இந்த இரு திரைப்படங்களையும் இவருடைய இசையமைப்பிற்கு சான்றாகவும் கூறலாம்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர், தனியார் அமைப்பு விருதுகள் என அவரின் இசை மகுடத்தை அலங்கரித்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமை மிக்கவர் எஸ்.பி.பி. ‛‛இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... என எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்த பாடல் வரி அவருக்கு மிகவும் பொருத்தமானதே. இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். இவர் மறைந்தாலும் இவரின் குரல் என்றென்றும் ஒலித்து கொண்டே இருக்கும்.
ரசிகர்கள் அஞ்சலிஎஸ்.பி.பி. மறைந்து ஓராண்டாகி விட்தை முன்னிட்டு நடிகர்கள், திரைக்கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரை பற்றி நினைவுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #SPBalasubrahmanyam என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது.