சர்வைவர் ஒரு வாழ்க்கை பாடம் - சிருஷ்டி டாங்கே
ADDED : 1469 days ago
தமிழில் ‛மேகா படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் சிருஷ்டி டாங்கே. ‛டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் அமைதியாக வந்து சென்ற இவர், ‛ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான, ‛சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால் முதல் நபராக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
இந்த நிகழ்ச்சியில் நானே விருப்பப்பட்டு தான் பங்கேற்றேன். ரொம்ப ‛ரிஸ்க் என்பது தெரியும். ‛அட்வெஞ்சர் மிகவும் பிடிக்கும். சர்வைவர் வாழ்க்கையை வாழ நினைத்தேன். என் முதல் ரியாலிட்டி ஷோ இது. அதனால், அனுபவத்திற்காகவே இதில் பங்கேற்றேன். நான் எவ்வளவு உறுதியான பெண் என்பதையும் காட்ட நினைத்தேன். அது எனக்கும் தெரிய வேண்டும்.
மைன்ட்கில்லிங் கேம்
சர்வைவர் என்பது ‛மைன்ட் கில்லிங் கேம். எவ்வளவு தான் நடித்தாலும், பங்கேற்பாளர்களின் உண்மை முகம் கண்டிப்பாக வெளியே வரும். இதில், வெற்றி பெற உடல் வலிமையோடு மனவலிமை மிகவும் முக்கியம். நாம் ஒவ்வொருவரும் இதுபோல் சர்வைவராக வாழ்ந்து பார்த்தால், நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு மேலானது என்பது தெரியும். வீட்டில் இருந்த போது, ஒதுக்கிய பல உணவுப்பொருள், இப்போது வரமாக தெரிகிறது. வீட்டுக்கு வந்ததும் ரொம்பவே வருத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வரவே மூன்று நாட்கள் ஆனது. வீட்டுக்கு வந்ததும் என் அம்மா, ‛நல்லவேளை சீக்கிரமே வந்து விட்டாய் என்றார்.
நோ ஸ்கிரிப்ட்
இந்த நிகழ்ச்சி ஏற்கனவே திரைக்கதையாக உருவாக்கி எடுக்கப்பட்டது இல்லை. அப்படியிருந்தால் நான் முதலில் வெளியேறி இருக்க மாட்டேன். காட்டில் முதல் நாள் ரொம்பவே சிரமப்பட்டோம். குளிப்பது உள்ளிட்ட காலைக்கடன்களை கூட சரியாக செய்ய முடியவில்லை. முதல் மூன்று நாள் சரியாக சாப்பிட முடியாமல் பசியில் அவதிப்பட்டேன். மூன்று நாளும் பழங்கள் மட்டுமே சாப்பாடு. தண்ணீர் மட்டுமே சுத்தமாக இருந்தது. உடலில் சில தடிப்புகளும் வந்து விட்டது. இன்னும் முழுமையாக சரியாகவில்லை.
கெட்டதை ஒதுக்கு
போட்டியில் மற்றவர்களை காட்டிலும் அம்ஜத் வெற்றி பெறுவார் என்பது என் கணிப்பு. உமாபதிக்கும் வாய்ப்பு உள்ளது. பார்வதியை பற்றி சொல்ல வேண்டுமானால், எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக அவர் நல்ல பெண். ஆனால், சர்வைவர் ஷோ என்பதை அவர் மறந்து விட்டார் என்று தான் சொல்வேன். இரண்டு படங்களில் நடித்துள்ளேன். விரைவில் வெளியாகிறது. சோசியல் மீடியாவை பொறுத்தவரை நல்லது கெட்டது எல்லாமே உண்டு. ‛நெகட்டிவிட்டி நிறைய உண்டு. கெட்டதை ஒதுக்கி, நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்றதாழ்வு கூடாது
துறையில், அனைவருமே சமம். நடிகர்களுக்கு தரும் மரியாதை, முக்கியத்துவம் அனைத்தும் நடிகை உள்பட அனைவருக்கும் ஒரே மாதிரியே வழங்க வேண்டும். இதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது. ‛டாப்பில் உள்ளவர்கள் இதுபற்றி பேச வேண்டும். அரசியல் ஆசை எல்லாம் எனக்கு இல்லை. மீண்டும் சர்வைவர் போன்ற நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.