டிரைவிங் லைசென்ஸை இந்தியில் ரீமேக் செய்யும் பிருத்விராஜ்
ADDED : 1459 days ago
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ், லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக ஆனார். தற்போது மோகன்லால் நடிக்கும் புரோ டாடி படத்தை இயக்கி வருகிறார். பிருத்விராஜின் இன்னொரு முகம் தயாரிப்பாளர்.
பிருத்விராஜ் புரொடக்ஷன் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி மலையாளத்தில் படங்களை தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் 2019ம் ஆண்டு வெளியான மலையாள படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. லால் ஜூனியர் இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ், சுரஜ் வெஞ்சரமுடு, மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
ஒரு முன்னணி நடிகருக்கும், வட்டார போக்குவரத்து அலுவலக பிரேக் இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் ஈகோ மோதல் தான் கதை. நடிகர் விதவிதமான கார் வாங்குகிறவர். ஆனால் அவரிடம் டிரைவிங் லைசன்ஸ் இருக்காது. ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பம் செய்வார். அப்போது ஆரம்பிக்கும் மோதல். இத்தனைக்கும் அந்த இன்ஸ்பெக்டர் நடிகரின் தீவிர ரசிகர். நடிகராக பிருத்விராஜும், இன்ஸ்பெக்டராக சுரஜ் வெஞ்சரமுடுவும் நடித்திருந்தார்கள்.
இதன் இந்தி ரீமேக்கில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். சுரஞ் வெஞ்சரமுடு கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை பிருதிவிராஜ் தயாரிக்க உள்ளார். இதன் மூலம் இந்தி பட உலகிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.