இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' சக்சஸ் பார்ட்டி
ADDED : 1459 days ago
தியேட்டர்களில் படம் வெளியான இரண்டு நாட்களுக்குள்ளாகவே சக்சஸ் மீட்டை தமிழ் சினிமாவில் வைத்துவிடுவார்கள். ஓடிடி தளங்களில் படங்கள் வெளியானாலும் தற்போது அதுபோல கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். எந்த அடிப்படையில் ஓடிடி படங்களுக்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடுகிறார்கள் என்பதை அப்படி கொண்டாடுபவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவில்லை.
கடந்த வருடம், இந்த வருடத்தையும் சேர்த்து இதுவரையில் ஓடிடி தளங்களில் நேரடியாக 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கும். அவற்றில் சில படங்களுக்காக அப்படி சக்சஸ் பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள். அந்தப் படங்களை எத்தனை பேர் பார்த்தார்கள், அப்படங்களுக்கான பார்வைகள் எவ்வளவு என்பதை சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனங்களும் இதுவரை அறிவித்தது இல்லை.
சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் பலர் நடித்த ''இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படத்தின் சக்சஸ் பார்ட்டியைக் கொண்டாடியிருக்கிறார்கள். அது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை படத்தின் நாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.