உள்ளூர் செய்திகள்

சைக்கோ

நடிப்பு - உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி
தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மிஷ்கின்
இசை - இளையராஜா
வெளியான தேதி - 24 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரமாயிரம் படங்களில் இந்த சைக்கோ போன்ற ஒரு கொடூரமான படம் ஒன்றாவது வெளிவந்திருக்குமா என்பது சந்தேகமே.

இதுவரை க்ரைம் த்ரில்லர் படங்கள் என்றால் ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை அவற்றை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி என படத்தை முடித்துவிடுவார்கள்.

ஆனால், சைக்கோ படத்தில் ஒவ்வொரு கொலையாக கழுத்து வெட்டுப்பட்டு, தலை தனியே துண்டாகி ரத்தம் தெறிக்க தெறிக்க விழுவது வரை விகாரமாகக் காட்டியிருக்கிறார்கள்.

ஐயா, சென்சார் அதிகாரிகளே இந்தப் படத்தை உங்கள் இரண்டு கண்களால் பார்த்துவிட்டுத்தான் ஏ சான்றிதழ் வழங்கினீர்களா ?. படத்தில் எத்தனை கொலை விழுகிறதோ அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஏ வழங்கி அத்தனை ஏக்களை இந்தப் படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள் என படத்தின் இயக்குனர் மிஷ்கின் ஏற்கெனவே சொல்லியிருந்தார். கூடவே, இதய பலவீனம் உள்ளவர்கள், தன் உடலிலோ, அடுத்தவர் உடலிலோ லேசான கீறல் பட்டு அதனால் வரும் ரத்தத்தைக் கூடப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து இந்தப் படத்திற்குப் போய்விட வேண்டாம்.

மிஷ்கினை தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக சிலர் சித்தரித்து அவரைப் பற்றிப் பெருமை பேசுவார்கள். அவர் இயக்கிய நந்தலாலா படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்திலும் க்ரைம், த்ரில்லர் என பயமுறுத்தல் வகைப் படங்களை மட்டுமே அவர் இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் கதைக்கு வருவோம். கண் பார்வையற்ற உதயநிதி, ரேடியோ ஆர்ஜே-வான அதிதி ராவ் ஹைதரியை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இருவரும் காதலை பரிமாறிக் கொள்ளப் போகும் ஓர் இரவில், அதிதி ராவ் கடத்தப்படுகிறார். அவரை ஏற்கெனவே பல பெண்களைக் கடத்தி தலை மட்டும் தனியே வெட்டி, தலையில்லாத உடலை மட்டும் வீசும் ஒரு சைக்கோ கொலைகாரன் கடத்தியிருப்பான் என்ற சந்தேகம் வருகிறது. ஒரு பக்கம் க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டரான ராம் விசாரணையில் இருக்க, மறுபக்கம் தன் காதலியைத் தேடி கண்டுபிடிக்க கண்பார்வையற்ற உதயநிதி முயல்கிறார். அதற்காக தன் கால்களை விபத்தில் இழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண் இன்ஸ்பெக்டரான நித்யா மேனன் உதவியை நாடுகிறார். சைக்கோ கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டானா, அதிதி மீட்கப்பட்டாரா என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.

உதயநிதி எப்படி நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கண்பார்வையற்றவர் என்பதால் படம் முழுவதுமே கூலிங் கிளாசையே அணிந்திருக்கிறார். நடிப்பை வெளிப்படுத்துவதில் ஒன்றான கண்களை மறைத்துவிட்ட பிறகு அவர் குரலால் மட்டுமே நடிக்க முடியும். ஆனால், எந்தவித ஏற்ற இறக்கம் இல்லாமல் வழக்கம் போல ஒரே மாதிரி ஒப்புவித்தலுடன் வசனம் பேசுகிறார். உடல்மொழியால் மட்டும் தன் திறமையை வளர்த்துக் கொள்ள இந்தப் படம் அவருக்கு பேருதவி புரிந்திருக்கும்.

படத்தின் கதாநாயகி நித்யா மேனன்தான். இப்படி ஒரு வாயாடி, கோபப் பெண்ணை தமிழ் சினிமாவில் இதுவரையில் காட்டியிருக்க மாட்டார்கள். அம்மாவை பேர் சொல்லி அழைக்கிறார், வாடி, போடி என்கிறார், கெட்ட, கெட்ட வார்த்தைகள் பேசி அதிர்ச்சியடைய வைக்கிறார்.

அதிதிராவ் ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தேவதையாக வந்து போய் பின்னர் சிறைப்பறவையால் சிக்கித் தவிக்கிறார்.

சைக்கோ கொலைகாரனாக ராஜ்குமார். பார்வையிலேயே பயமுறுத்துகிறார். உதயநிதியின் உதவியாளராக சிங்கம்புலி, போலீஸ் அதிகாரியாக ராம், அவர்களின் முடிவு சோகத்திலும் சோகம். அதிலும் ராமுக்கு ஏற்படும் முடிவைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொள்ள வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் பெரும் பலம் இளையராஜாவின் இசை. உன்னை நினைச்சி...., தூங்க முடியுமா இரண்டு பாடல்களுமே படத்தில் தேவையான இடங்களில் உணர்வுபூர்வமாய் அமைந்து ரசிக்க வைக்கின்றன. ராஜாவின் பின்னணி இசையைப் பற்றி என்ன சொல்வது, வழக்கம் போல ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். இப்படி ஒரு படத்தைக் கொடுத்தால் தன் இசையாலேயே மிரட்டி விடுவாரே.

தன்வீர் மிர் ஒளிப்பதிவும், காமிரா கோணங்களும் படமெடுக்க ஆசைப்படும் பலருக்குப் பாடமாய் இருக்கும். பி.சி. ஸ்ரீராமும் பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.

சைக்கோவின் தனிமையிடம் பார்க்கவே பயமூட்டுகிறது. அதற்கான ஒளியமைப்புகள் மேலும் கலவரப்படுத்துகின்றன. க்ராபோர்ட் கலை இயக்கத்திற்கு சரியான வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பெயரிலேயே சைக்கோ என சொல்லிவிட்டார்கள். அதனால், படம் எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். எத்தனை ரத்தம் தெளித்தாலும் அந்தப் படத்தை பயமில்லாமல் பார்ப்பேன் என்பவர்கள் மட்டும் படத்தைப் பார்க்கலாம். அவ்வளவு ரத்தத்துடன் இந்தப் படத்தைப் படமாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நாம் சொல்வதையெல்லாம் இயக்குனர் மிஷ்கின் கேட்கப் போகிறாரா என்ன ?. அவருக்குத் தேவை தன் படத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்பதே ?.

சைக்கோ - ச்சைக்கோ



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !