உள்ளூர் செய்திகள்

பரமபதம்

தயாரிப்பு - சாய் நந்தினி மூவி வேர்ல்டு
இயக்கம் - தனேஷ் பிரபு, விக்னேஷ் பிரபு
இசை - பாலன் ராஜ், ஜெகதீஷ்
நடிப்பு - தனேஷ் பிரபு, விக்னேஷ் பிரபு, கௌசல்யா
நேரம் - 1 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமா என்றால் நமக்குத் தெரிந்தது தமிழகத்தில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் தான். தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவிலும் அவ்வப்போது தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டு அங்கு வெளியிடப்படுகின்றன. அப்படி வந்துள்ள படம் தான் இந்த பரமபதம்.

இப்படம் 30க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று 18 விருதுகளை வென்றுள்ளது. மலேசிய சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்த படம் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் தேர்வானது.

ஹாலிவுட்டில் வெளிவந்த ஜுமான்ஜி படக் கதையைப் போல இந்தப் படத்தில் பரமபதம் விளையாட்டை மையப்படுத்தி இருக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பரமபதம் சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் மூலம் மலேசிய நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்ற தகவலுடன் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

தொல்லியல் ஆராய்ச்சியாளர் தனேஷ் பிரபு, பத்திரிகை நிருபர் ரிஷிகேசன், வேலையில்லாமல் இருக்கும் சசிவரூபன், பவித்ரன் ஆகிய நால்வரும் நண்பர்கள். தங்கள் கவலைகளை மறக்க ஒரு சிறு சுற்றுலா செல்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்து தற்போது சிதிலமடைந்துள்ள ஒரு காலனிக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார் தொல்லியர் ஆராய்ச்சியாளரான தனேஷ். அங்கு மரத்தால் செய்யப்பட்ட பரமபதம் விளையாட்டுப் பொருள் அவர்கள் கண்களில் சிக்குகிறது. அந்த விளையாட்டை விளையாடி பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். தனேஷ் அந்த விளையாட்டை தன்னுடனே எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறார். அதன்பின் நண்பர்கள் நால்வரின் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்கள் நடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

லோ பட்ஜெட் படங்கள் என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தில் தயாராகி வெளிவரும் சில படங்களை விட இந்த மலேசியத் திரைப்படமான பரமபதம் உருவாக்கத்தில் மிஞ்சி நிற்கிறது. விஷுவலாக படத்தை எந்த அளவிற்கு பரபரப்பாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் தனேஷ் பிரபு, விக்னேஷ் பிரபு.

இவர்களில் தனேஷ் படத்தின் நாயகர்களில் ஒருவராகவும், விக்னேஷ் படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே அவர்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வில்லனாக நடித்துள்ள விக்னேஷ் நடிப்பு தான் மற்றவர்களின் நடிப்பை விட மிரட்டலாக அமைந்து படத்தை ரசிக்க வைக்கிறது. இங்கு தமிழ் சினிமா பக்கம் வந்தால் அவருக்கு பல புதிய பட வாய்ப்புகள் கிடைக்கலாம்.

படத்தில் தனியாக ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நான்கு நண்பர்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். நண்பர்கள் நால்வரில் தனேஷ் தவிர மற்ற மூவர் ரிஷிகேசன், சசிவரூபன், பவித்ரன் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். கொஞ்சம் பயிற்சி எடுத்து நடித்திருந்தால் இவர்கள் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்.

சசிவரூபனுக்கு மட்டும் காதலியாக ஒரு ஜோடியைக் கொடுத்திருக்கிறார்கள். காதலியாக கௌசல்யா. நடிக்கக் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் ஒரு டூயட் பாடலைக் கொடுத்துவிட்டார் இயக்குனர். சசிவரூபன் அக்காவாக விக்கி நடராஜா, வருங்கால மாமனாராக கே.எஸ்.மணியம் மற்ற கதாபாத்திரங்களில் கவனிக்கப்படுகிறார்கள்.

ஜெகதீஷ்பரன் ஒளிப்பதிவு ஒரு த்ரில்லர் படத்திற்கு உரிய காட்சியமைப்பைக் கொடுத்துள்ளது. பாலன் ராஜ், ஜெகதீஷ் இருவரது பின்னணி இசையும் காட்சிக்குத் தகுந்தபடி பின்னணி இசையில் உழைத்திருக்கிறார்கள்.

திரைக்கதையில் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருந்து, சிலரது நடிப்பில் இன்னும் பயிற்சியைச் சேர்த்திருந்தால் பரமபதம் இன்னும் பரபரப்பான பதமாக வந்திருக்கும்.

பரமபதம் - பாம்பும், ஏணியும்...



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !