யாரோ
தயாரிப்பு - டேக் ஓகே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சந்தீப் சாய்
இசை - ஜோஸ் பிராங்க்ளின்
நடிப்பு - வெங்கட் ரெட்டி, உபாசானா
வெளியான தேதி - 4 பிப்ரவரி 2022
நேரம் - 1 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
சினிமாவில் நாம் இறக்க வேண்டிய அனைத்து வித்தைகளையும் மொத்தமாக இறக்க வேண்டும் என இயக்குனர்கள் நினைக்கக் கூடாது. ரசிகர்கள் எதை விரும்புவார்களோ, அவர்களுக்கு என்ன புரியுமோ அதை மட்டுமே கொடுக்க வேண்டும். மிகவும் வித்தியாசமான படமாகக் கொடுக்கிறோம் என தானும் குழம்பி, படம் பார்க்க வருபவர்களையும் குழப்பக் கூடாது.
இந்த 'யாரோ' யாருக்காக எடுக்கப்பட்ட படம் என சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும். படம் பார்க்கும் சாமானிய ரசிகனுக்கும் படம் புரிய வேண்டும். அவர்களாக இதைப் புரிந்து கொள்வார்கள் என நினைத்து ஒட்டு மொத்த படத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
'சைக்கோ' கதை என்றால் வித்தியாசமான படமாக வந்துவிடும் என பல அறிமுக இயக்குனர்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது போலிருக்கிறது. அதுதான் இந்தப் படத்தின் இயக்குனர் சந்தீப் சாய்க்கு இருக்கிறது. குறும்படமாக பார்ப்பதென்றால் கூட பொறுத்துக் கொள்ளலாம், முழு நீளப் படம் என்றால் பொறுமை வேண்டுமே ரசிப்பதற்கு.
சிறு வயதிலேயே அப்பாவால் அதிக கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் படத்தின் நாயகன் வெங்கட் ரெட்டி. சென்னையில் ஒரு பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டிற்குள் அடிக்கடி யாரோ வருகிறார்கள் என பயப்படுகிறார். நண்பன் மூலமாக ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியை நாடுகிறார். அந்த வீட்டில் அடுத்தடுத்து என்னவெல்லாமோ நடக்கிறது. அதெல்லாம் ஏன் நடக்கிறது ? எதற்காக நடக்கிறது ? என்பதற்கான விடைதான் மீதிக் கதை.
சைக்கோத்தனமான கதாநாயகனாக அறிமுக நடிகர் வெங்கட் ரெட்டி. பயம், தவிப்பு என முதல் படத்திலேயே ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். சைக்கோ கதாபாத்திரம் என்பதால் என்ன செய்தாலும் அது கதாபாத்திரத்தின் தன்மையால் ஓரளவிற்கு நடித்தாலும் நடிப்பை மெருகேற்றி விடும். ஆனாலும், அதிக ஆர்வத்துடன் நடித்திருக்கிறார் வெங்கட் என்பது காட்சிக்குக் காட்சி தெரிகிறது.
படத்தின் கதாநாயகியாக உபாசானா. இடைவேளைக்கு முன் ஒரே ஒரு காட்சியிலும், பின்னர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார்.
ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசையில் கொஞ்சம் பயமுறுத்துகிறார். ஒளிப்பதிவாளர் கே.பி. பிரபு, படத்தொகுப்பாளர் அனில் கிரிஷ் இருவருக்கும்தான் இதை பரபரப்பான படமாகக் கொடுக்க வைப்பதில் நிறைய வேலை.
விஷுவலாக மட்டுமே படத்தைக் கடத்திக் கொண்டு போய்விட வேண்டும் என இயக்குனர் நினைத்திருக்கிறார். இருக்கு ஆனா இல்ல, இதுதான் படத்தின் மையக்கரு. அதை எளிதில் புரிய வைத்திருந்தால் யாவரும் ரசிக்கும் ஒரு படமாக வந்திருக்கும்.
யாரோ - ஏனோ ?