உள்ளூர் செய்திகள்

எறும்பு

தயாரிப்பு - மன்ட்ரு ஜிவிஎஸ் புரொடக்ஷன்
இயக்கம் - சுரேஷ் ஜி
இசை - அருண் ராஜ்
நடிப்பு - மோனிகா சிவா, சக்தி ரித்விக், சார்லி
வெளியான தேதி - 16 ஜுன் 2023
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் எளிமையான கதைகள் அதிகம் வருவதேயில்லை. ஒரு சின்ன விஷயத்தில் கூட ஆயிரம் கதைகளைச் சொல்ல வாய்ப்புகள் இருந்தும் அப்படியான பரீட்சார்த்த முயற்சிகளை நமது இயக்குனர்கள் எடுப்பதில்லை. வியாபரமாகிப் போன சினிமாவில் எப்போதே ஒரு முறை 'எறும்பு' போன்ற சில எளிய கதைகள் வருவது ஆச்சரியம்தான்.

ஒரு சிறுவனின் சிறிய ஆசை ஒன்று அவனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த, அவனது பாசமான அக்கா அந்த சிக்கலில் இருந்து அவனைக் காப்பாற்ற முயற்சிப்பதை யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ். ஏழை விவசாயக் கூலிகளின் வாழ்க்கை நிலை எப்படியிருக்கிறது, அவர்கள் எவ்வளவு சிரமங்களுக்கிடையில் வாழ்கிறார்கள் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயக் கூலியாக இருப்பவர் சார்லி. அவரது முதல் மனைவிக்கு ஒரு மகள், ஒரு மகன். இரண்டாவது மனைவி சூசன் ஜார்ஜுக்கு ஒரு மகன். எம்எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடனை எப்படியாவது அடைக்க வேண்டுமெனத் துடிக்கிறார் சார்லி. கரும்பு வெட்ட மனைவியுடன் வெளியூருக்குச் செல்கிறார். அப்போது சூசன் குழந்தையின் மோதிரத்தை முதல் மனைவியின் மகனான சக்தி ரித்விக் போட ஆசைப்பட, அதைத் தருகிறார் பாட்டி. ஆனால், மோதிரம் காணாமல் போகிறது. சித்தி வந்தால் என்ன நடக்குமோ என பயப்படுகிறான் சக்தி. ஆனாலும், அவனது அக்கா மோனிகா சிவா அதே போல வேறு ஒரு மோதிரம் வாங்க பணத்தைச் சேர்க்க ஆரம்பிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு ஏழை விவசாயியாக சார்லி. அவரது தோற்றம் தாத்தா வயதுக்குரியவர் போல இருக்கிறது. இருந்தாலும் வழக்கம் போல தனது கதாபாத்திர நடிப்பில் முத்திரை பதிக்கிறார் சார்லி. அவரது இரண்டாம் மனைவியாக சூசன் ஜார்ஜ். சித்தி என்றாலே கொடுமை செய்பவர் என்பதை காலம் காலமாக சினிமாவில் காட்டி வருகிறார்கள். அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அக்கா பச்சையம்மாவாக நடித்திருக்கும் சிறுமி மோனிகா சிவா, தம்பி முத்துவாக நடித்திருக்கும் சக்தி ரித்விக் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். கிராமத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியர் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக மோனிகா எந்த ஒரு விஷயத்தையும் மெச்சூர்டாக எதிர்கொள்வது பாராட்ட வைக்கிறது. அவரது ஆடை விஷயத்தில் மட்டும் இயக்குனர் கவனம் செலுத்தத் தவறிவிட்டார். ஒரு சிறுமிக்கு எந்த விதமான ஆடை தர வேண்டும் என்பதை கவனித்திருக்க வேண்டும். இவர்களுக்குத் துணையாக எப்போதும் கூடவே இருக்கும் ஜார்ஜ் மரியான் அப்பாவித்தனமான நடிப்பில் அசத்துகிறார். வட்டிக்குப் பணம் கொடுப்பவராக எம்எஸ் பாஸ்கர். எவ்வளவு சுடு சொற்களை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

வட தமிழ்நாடு இடங்களை சினிமாவில் பார்ப்பது மிக அரிது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை ஆகியவைதான் தமிழ் சினிமாவில் அதிகமான கதைக்களங்களாக இருக்கும். கடலூர் மாவட்ட கிராமம் ஒன்றை அதன் இயல்புடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் காளிதாஸ். அருண் ராஜ் இசையும் காட்சிகளுடன் ஒன்றி பயணிக்கிறது.

படம் மெதுவாக நகர்கிறது என்பதைத் தவிர வேறு பெரிய குறைகள் படத்தில் இல்லை. எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் என்ன நினைத்தாரோ அதைப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ். இது போன்ற வாழ்வியல் படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய வர வேண்டும்.

எறும்பு - கரும்பு



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !