ரங்கோலி
தயாரிப்பு - கோபுரம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - வாலி மோகன்தாஸ்
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
நடிப்பு - ஹமரேஷ், பிரார்த்தனா, முருகதாஸ்
வெளியான தேதி - 1 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
பள்ளிகளை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் பல படங்கள் காதல் படங்களாகவே வந்தன. ஆனால், இந்தப் படத்தில் காதலைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளாமல், கார்ப்பரேஷன் பள்ளி, கான்வென்ட் பள்ளி என வேறு ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வாலி மோகன்தாஸ்.
கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த ஒரு ஏழை மாணவனுக்கு கான்வென்ட் பள்ளியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது, இரண்டுக்குமான வித்தியாசத்தை அந்த வயதில் ஒரு மாணவன் எப்படி அணுகுகிறான் என கொஞ்சம் உளவியல் ரீதியாகவும் அணுகியிருக்கிறார் இயக்குனர்.
லாண்டரி தொழில் செய்யும் முருகதாஸின் மகன் ஹமரேஷ். கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கும் தன் மகனை கான்வென்ட் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு சில லட்சம் கட்டணம் செலுத்தி சேர்த்தும் விடுகிறார். கார்ப்பரேஷன் பள்ளியை விட்டு கான்வென்ட்டிற்குச் செல்கிறார் ஹமரேஷ். அங்கு அவருக்கு சக மாணவர்களுடன் செட்டாகவில்லை, சண்டைதான் வருகிறது. தமிழ் மீடியத்தில் படித்ததால் ஆங்கில மீடியத்தில் படிக்கவும் சிரமமாக உள்ளது. இதனிடையே, உடன் படிக்கும் சக மாணவி பிரார்த்தனா மீது காதலும் வருகிறது. ஒரு கட்டத்தில் எதற்காக பள்ளி மாறி வந்தோம் என்பதை உணர்ந்து கொள்கிறார். பின்னர் ஒழுங்காக படித்தாரா அல்லது தடுமாறினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
வட சென்னையை மையப்படுத்தி பல ரவுடியிசக் கதைகள்தான் வந்துள்ளன. ஆனால், முதல் முறையாக ஒரு பள்ளிக்கூடத்துக் கதையை இயக்குனர் தேர்வு செய்திருப்பது ஆச்சரியம்தான். துணியை வெளுக்கும் கூடங்கள், அது சார்ந்த குடும்பம் என கதைக்களமும் புதிதாக உள்ளது.
பள்ளி மாணவனாக ஹமரேஷ் அறிமுகப் படத்திலேயே கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை வெளிப்படுத்துகிறார். கார்ப்பரேஷன் பள்ளியில் படித்து வளர்ந்தவருக்கு அந்த சூழல்தான் பிடித்திருக்கிறது. ஆனால், அப்பாவின் கட்டாயத்தால் கான்வென்ட் பள்ளிக்குச் செல்கிறார். அங்குள்ள சூழல் அவருக்கு இறுக்கமானதாகவே அமைகிறது. அவரால் அதற்கு ஈடு கொடுத்து படிக்க முடியவில்லை. படம் முழுவதுமே ஹமரேஷின் நடிப்பு அந்தந்த காட்சிகளுக்குரிய தாக்கத்துடன் அமைந்து பாராட்ட வைக்கிறது.
பள்ளி மாணவியாக பிரார்த்தனா. ஒரு வகுப்பில் ஏதோ ஒரு மாணவி மீதுதான் அங்கு படிக்கும் சக மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். அப்படியான மாணவியாக பிரார்த்தனா இருக்கிறார். பார்ப்பதற்கு ஐந்தாம் வகுப்பு படிப்பவர் போல இருக்கிறார் பிரார்த்தனா. இருந்தாலும் நடிப்பில் சமாளித்துவிடுகிறார்.
ஹமரேஷ் அப்பாவாக ஆடுகளம் முருகதாஸ், அம்மாவாக சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்காவாக அக்ஷயா ஹரிஹரன் ஆகியோர் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
கேஎஸ் சுந்தரமூர்த்தி பின்னணி இசை, மருதநாயகம் ஒளிப்பதிவு ஆகியவை இயக்குனருக்கு பட உருவாக்கத்தில் கை கொடுத்திருக்கிறது.
ஒரு படம் என்றால் திரைக்கதையில் ஏதாவது ஒரு திருப்பம் வர வேண்டும், அல்லது ஒரு முடிச்சு விழ வேண்டும். அப்படி எதுவும் இப்படத்தில் இல்லாதது சுவாரசியத்தைக் குறைக்கிறது. திரும்பத் திரும்ப நடக்கும் மாணவர்கள் மோதல், இலக்கில்லாமல் நகரும் திரைக்கதை ரங்கோலியின் வண்ணத்தில் குறையாக அமைந்துவிடுகிறது.
ரங்கோலி - இருப்பதே மகிழ்ச்சி…