நடன்ன சம்பவம் (மலையாளம்)
தயாரிப்பு : அனூப் கண்ணன் ஸ்டோரீஸ்
இயக்கம் : விஷ்ணு நாராயண்
இசை : அங்கீத் மேனன்
நடிகர்கள் : பிஜூ மேனன், சுராஜ் வெஞ்சாரமுடு, ஸ்ருதி ராமச்சந்திரன், லிஜோமோல் ஜோஸ், ஜானி ஆண்டனி
வெளியான தேதி : 21 ஜூன் 2024
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2.5 / 5
நடன்ன சம்பவம் (நடந்த சம்பவம்)
கப்பலில் வேலை பார்க்கும் பிஜூமேனன் ஆறு மாதம் வீட்டில் இருப்பார். மனைவி வேலைக்குச் செல்ல வீட்டில் குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வார். அப்படி புதிதாக அவர்கள் குடி வந்த அபார்ட்மெண்டில் பக்கத்து பக்கத்து பிளாட்டுகளில் உள்ள பெண்கள் பிஜூமேனனின் இயல்பான நடவடிக்கைகளால் ஈர்க்கப்படுகிறார்கள். பிஜூமேனன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் உள்ள சுராஜ் வெஞ்சாரமுடுவின் மனைவி லிஜோமோல் ஜோஸ் கணவனின் கண்டிப்பான ஆணாதிக்க போக்கினால் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவரும் பிஜூமேனனுடன் கணவனுக்கு தெரியாமல் நட்பாக பழகுகிறார். தங்கள் வீட்டு பெண்களிடம் பிஜூ மேனன் இப்படி பழகுவது கண்டு சுராஜ் வெஞ்சாரமுடு மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் ஆத்திரம் ஏற்படுகிறது.
ஒருநாள் புத்தகம் விற்கும் சேல்ஸ் கேர்ள் ஒருவர் பிஜூமேனன் வீட்டிற்கு வந்து அவரிடம் புத்தகம் விற்றுவிட்டு அவர் வீட்டில் உள்ள டாய்லெட்டை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கிறார். பிஜூமேனனும் சம்மதித்து உள்ளே அழைத்து செல்கிறார். இதனைக் கண்ட சுராஜின் நண்பர் அவரிடம் இந்த விஷயத்தை, சொல்ல பிஜூமேனன் வீட்டிற்கு நேரடியாக செல்லும் சுராஜ் ஆவேசமாக அவரை தாக்குகிறார். மேலும் அந்தப் பெண் அங்கு இருப்பதையும் மொபைலில் படம் பிடித்து கொள்கிறார்கள்.
ஆனால் இதை சட்டரீதியாக அணுக முடிவு செய்யும் பிஜூமேனன் காவல்துறையில் புகார் அளிக்கிறார். இன்ஸ்பெக்டர் நேர்மையாக செயல்பட நினைத்தாலும் சுராஜ் உயரதிகாரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் வழக்கு பதிய தயங்குகின்றனர். அதன் பின் என்ன நடந்தது ? பிஜூமேனன் இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுத்தார் ? சுராஜ் வெஞ்சாரமூடுக்கு அவர் பாடம் புகட்டினாரா என்பது மீதிக்கதை.
மனைவியை மதிக்கின்ற, வேலைக்குச் செல்லும் அவருக்கு உதவியாக வீட்டை கவனிக்கின்ற ஒரு கம்பீரமான கணவன் கதாபாத்திரத்தில் பிஜூமேனன் இயல்பாகவே பொருந்தி இருக்கிறார். நமக்கே அவரது கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு வருகிறது என்றால் படத்தில் பெண் கதாபாத்திரங்களை பற்றி சொல்லவா வேண்டும்..? அவரை சரியாகப் புரிந்து கொண்ட மனைவியாக ஸ்ருதி இராமச்சந்திரன், ஜாடிக்கேத்த மூடியாக பொருத்தமான தேர்வு.
நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு சிறந்த சைக்கோ வில்லன் விருது வழங்கும் அளவிற்கு படம் முழுவதும் டெரர் காட்டி நடித்திருக்கிறார். இனி இவரை நகைச்சுவை நடிகராக பார்க்க முடியாதோ என்கிற வருத்தம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. சுராஜின் மனைவியாக லிஜோமோல் ஜோஸ். கணவனின் ஆணாதிக்கத்திற்கு அடங்கிப்போய், அதேசமயம் அதிலிருந்து விடுபட துடிக்கும் மன அழுத்தம் கொண்ட ஒரு சராசரி பெண்ணின் எண்ணங்களை அழகாக பிரதிபலித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரியிடம் அவர் படபடவென பட்டாசாக புரியும் இடத்தில் அட என ஆச்சரியப்பட வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜானி ஆண்டனியின் நகைச்சுவை கலந்த விசாரணை படத்திற்கு இன்னும் கலகலப்பு சேர்க்கிறது. .
பட்ஜெட்டிற்குள் படம் பண்ண வேண்டும் என நினைத்து இந்த கதையை உருவாக்கினார்களோ என்னவோ, இடைவேளைக்கு முன்பு வரை ஒரு அப்பார்ட்மெண்ட், இடைவேளைக்கு பின்னால் ஒரு போலீஸ் ஸ்டேஷன் என இரண்டு லொகேஷன்களிலேயே மொத்த படமும் முடிந்து விடுகிறது. ஆனால் இதில் தன்னால் முடிந்த வரை ஒளிப்பதிவில் வித்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனீஷ் மாதவன். இசையமைப்பாளர் அங்கீத் மேனனின் பங்களிப்பு படத்திற்கு பெரிய அளவில் உதவி செய்ததாக தெரியவில்லை.
பெரும்பாலான கணவன்மார்களின் சந்தேக பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணு நாராயணன். ஆஹா ஓஹோ என சொல்லும் படமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை என்னதான் நடக்கும் என நம்மை பார்க்க வைக்கும் விதமாக கலகலப்பும் சீரியஸும் சரிவிகிதத்தில் கலந்து போரடிக்காமல் நகர்த்தி சென்ற வகையில் இயக்குனருக்கு வெற்றி தான்.
நடன்ன சம்பவம் : தினசரி செய்தி