உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / மாண்புமிகு பறை

மாண்புமிகு பறை

தயாரிப்பு : சியா புரடக் ஷன்ஸ்
இயக்கம் : எஸ். விஜய் சுகுமார்
நடிப்பு : லியோ சிவகுமார், காயத்ரி ரெமா, ஆர்யன்
ஒளிப்பதிவு : கொளஞ்சி குமார்
இசை : தேவா
வெளியான தேதி : டிசம்பர் 12, 2025
நேரம் : 1 மணிநேரம் 49 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

கிராமத்தில் ஆதி பறை இசை குழுவை நடத்தி வரும் லியோ சிவகுமார், காயத்ரி ரெமோவை காதல் திருமணம் செய்கிறார். அந்த இசை, தொழிலை தெய்வமாக நினைக்கிறார். ஆனால், அந்த குழுவுக்கு ஏகப்பட்ட அவமானம். கச்சேரிக்கு செல்லும் இடங்களில் ஜாதி ரீதியிலான தாக்குதல்கள், பெண்களை தவறாக பார்க்கிறார்கள். ஒரு ஊருக்கு செல்லும்போது ஏற்படும் மோதலில் அவர் நண்பனை கொடூரமாக கொலை செய்கிறார்கள் இன்னொரு தரப்பினர். ஹீரோவையும் ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. அதிலிருந்து அவர் தப்பித்தாரா? நண்பன் மரணத்துக்கு நீதி கிடைத்ததா? ஹீரோவை திட்டம் போட்டு தீர்த்து கட்ட நினைப்பவர்கள் யார்? அதை தெரிந்து கொண்ட லியோ சிவா மனைவியான, ஹீரோயின் காயத்ரி ரெமா என்ன செய்கிறார். இதுதான் மாண்புமிகு பறை படத்தின் கரு. எஸ். விஜய்சுகுமார் இயக்கி இருக்கிறார்.

ஹீரோ லியோ சிவக்குமார் (திண்டுக்கல் ஐ.லியோனி மகன்) சுறுசுறுப்பாக, உற்சாகமாக நடித்து இருக்கிறார். தனது நண்பன் மரணத்தில் அவர் அழுகிற இடமும், அதற்கு நீதி வேண்டும் என துடிக்கிற இடமும் நல்ல நடிப்பு. மனைவியுடனான அன்பு காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். ஆனால், அவர் கேரக்டரை வேறு மாதிரி கொண்டு போய், அவருக்கான வாய்ப்பை குறைத்து இருக்கிறார் இயக்குனர்.

ஹீரோ நண்பராக வரும் ஆர்யன் நடிப்பு, கோபம் படத்துக்கு பிளஸ். பெற்றோர், சகோதரன் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்யும் காயத்ரி ரெமாவின் கேரக்டர், கணவன் மீதான பாசம், தனக்கு ஒரு சோகம் ஏற்பட்டபின் காட்டுகிற அழுகை, கோபம் சிறப்பு. ஒரு கட்டத்தில் அவர் பெற்றோர் வீட்டுக்கு அழுது கொண்டே செல்வதும், அங்கே சில உண்மைகள் அறிந்து கொதிப்பதும் படத்தில் இருக்கும் உருப்படியான சீன்களில் ஒன்று, அவரும் பறை இசை கலைஞராக மாறுவதுடன் படம் முடிகிறது. ஆனால், அந்த சீன்களில் உயிர் இல்லை. அதை இன்னும் அழுத்தமாக, இன்னும் தெளிவாக எடுத்து இருக்கலாம்.
கதையில் ரவுடிகள், போலீஸ், பைனான்சியர் என ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். அனைவரும் வெறுப்பு ஏற்றுகிறார்கள். ஹீரோயின் அப்பாவாக வரும் கஜராஜ், அம்மா ரமா சம்பந்தப்பட்ட டுவிஸ்ட் சீன் சில உண்மை சம்பவங்களை நினைவுப்படுத்துகிறது. ஆனாலும், அதில் முழுமை இல்லை.

பறை இசை, பறை அடிப்பவர்கள், அதனால் ஏற்படும் சிரமங்கள், அவமானங்கள், ஜாதிய ஒடுக்குமுறைகளை சொல்லும் நல்ல கரு. ஆனால், அதை சரியாக எடுக்காமல் திணறி இருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குபின் சம்பந்தம் இல்லாமல் கதை எங்கேயோ சுற்றி, எதிலோ முடிகிறது. பெரும்பாலான சீன்களில் அழுத்தம் இல்லை, திரைக்கதையில் நேர்த்தி இல்லை.

ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்த தேவா இசையமைத்து இருக்கிறார். இத்தனைக்கும் பறையிசை சம்பந்தப்பட்ட கதை. ஆனால், பாடல்களில் இதம் இல்லை. தேவா இசையா என சந்தேகம் வருகிறது. கிளைமாக்சில், ஒரு முக்கியமான காட்சியில் பறை அடித்தபடி ஆக்ரோஷமாக ஆடுகிறார் ஹீரோயின் காயத்ரி ரெமா. அவர் மூவ்மென்ட்டுக்கும், பறை அடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறைந்தபட்சம், சிலநாட்கள பறையிசை கற்றுக்கொண்டு அந்த சீனில் நடித்து இருக்கலாம் அல்லது பறை அடிப்பது மாதிரி நடித்து இருக்கலாம், இரண்டுமே இல்லை. இப்படி ஏனோதானோவென இருக்கிறது படம். கிளைமாக்சில் எதையோ சொல்லப்போகிறார்கள் ஹீரோயின் எதையோ செய்யப்போகிறார் என எதிர்பார்த்தால் இருந்தால் டக்கென சப்பொன முடிகிறது படம்.

மாண்புமிகு பறை - பறை இசை சம்பந்தப்பட்ட, சமூக அக்கறை கதை, ஆனா, சவுண்டே இல்லை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Shekar, Mumbai
2025-12-19 09:56:04

லியோனி கிறிஸ்தவ மதம், ஆனால் மகன் பெயர் சிவகுமார். இப்படியே ஊரை ஏமாத்துங்க.