உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / ப ப பா (மலையாளம்)

ப ப பா (மலையாளம்)

தயாரிப்பு : ஸ்ரீ கோகுலம் மூவீஸ்
இயக்கம் : தனஞ்செய் சங்கர்
நடிப்பு : திலீப், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா, சாண்டி, பைஜு சந்தோஷ், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி
ஒளிப்பதிவு : ஆர்மோ
இசை : ஷான் ரஹ்மான்(பாடல்கள்), கோபி சுந்தர் (பின்னணி இசை)
வெளியான தேதி : டிசம்பர் 18 2025
நேரம் : 2 மணி 32 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

படத்தின் டைட்டில் விரிவாக்கம் பயம் பக்தி பகுமானம்

முதலமைச்சர் பைஜூ சந்தோஷை அவர் பதவியேற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கு முன்பாகவே அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் வைத்து சாமர்த்தியமாக கடத்துகிறார் திலீப். சரண்யா பொன்வண்ணன் உதவியுடன் தமிழக கேரள எல்லைக்குள் யாரும் தெரியாமல் அவரை அடைத்து வைக்கிறார். முதல்வரின் மகனான வினித் சீனிவாசன் தனது தந்தையை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி சாண்டியின் உதவியுடன் களத்தில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் சாண்டியும் திலீப்பின் ஆள் என தெரிய வருகிறது. திலீப் எதற்காக முதலமைச்சரை கடத்தினார் ? வினித் சீனிவாசன் தனது தந்தையை காப்பாற்றினாரா ? திலீப்பின் முயற்சி வெற்றி பெற்றதா என்பது மீதிக்கதை.

திலீப்பின் நடிப்பும் வசனங்களும் வழக்கம்போல அவரது ரசிகர்களை கைதட்ட வைக்கின்றன என்றாலும் அவரது கதாபாத்திரம் அழுத்தமாக, ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக உருவாக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் கதையும் அந்த அளவிற்கு படு வீக்காக இருக்கிறது. முதலமைச்சரை ரொம்பவே சாதாரணமாக கடத்துவது, அவரை மறைத்து வைப்பது ஆகியவற்றை விட அவரை கடத்தியதற்காக சொல்லப்படும் காரணம் ரொம்பவே சொதப்பலாக இருக்கிறது. ஆனாலும் திலீப் தன் பங்கிற்கு ஆட்டம் பாட்டம் சண்டை என அசத்தவே செய்கிறார்.

கில்லி பாலா என்கிற கதாபாத்திரத்தில் தீவிர விஜய் ரசிகராக நடித்துள்ளார் மோகன்லால். சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் கொஞ்சம் அதிகப்படியான நேரம் எடுத்துக்கொண்டு சில காட்சிகளிலும் ஒரு பாடல் காட்சியிலும் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.. குறிப்பாக இந்த படத்தில் அவரது இளமை தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது உண்மை. திலீப்பும் அவரும் இணைந்து நாட்டு நாட்டு பாடல் ஸ்டைலில் ஆடும் அந்த அழிஞ்சாட்டம் டான்ஸ் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட் தான்.

லோகா படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்த சாண்டி மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் அவர் முதன்முறையாக மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமான படம் இதுதான். இதிலும் அவருக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம்.. நிறைய முக்கியத்துவம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிகராக சாண்டி உருவெடுப்பார் என்பது உறுதி.

யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் சஸ்பென்சாக என்ட்ரி கொடுக்கிறார் எஸ்.ஜே சூர்யா. மலையாளத்தில் அவரது முதல் படமும் இதுதான். மார்க் ஆண்டனி பாணியில் திலீப், மோகன்லாலுடன் அவர் கிளைமாக்ஸில் உரையாடும் அந்த மூன்று நிமிடக் காட்சி, அவர் பேசும் வசனங்கள் எல்லாமே காமெடி அலப்பறை என்பதுடன் இரண்டாம் பாகத்திற்கு அடி போடுவது போல அமைந்துள்ளது. தியான் சீனிவாசன் எதற்காக வருகிறார், போகிறார் என்றே தெரியவில்லை.. படத்தில் அவருக்கு கொடுத்த பில்டப்பும் வீண்.. சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி என தமிழ் முகங்கள் இருந்தாலும் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை.. முதலமைச்சராக வித்தியாசமான கெட்டப்புடன் படம் முழுக்க சிரமப்பட்டிருக்கிறார் பைஜூ சந்தோஷ்.

படத்தில் ஷான் ரகுமான் பாடல்கள் மூலம் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்திருக்கிறார் என்றால் கோபி சுந்தர் பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்மோ சேசிங் காட்சிகளிலும் கேரள இயற்கை அழகை அப்படியே திகட்டாமல் கொடுத்திருப்பதிலும் தன் பங்கை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.

இந்த படத்தில் நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய அம்சங்களில் முக்கியமானது இந்த படத்தின் கதையை ஒரு அடார் லவ் படத்தில் நாயகியாக நடித்த நூரின் ஷெரீப் மற்றும் அவரது கணவர் பாஹீம் சாபர் இருவரும் இணைந்து எழுதியது தான். ஒரு நடிகை, பிரபல ஹீரோவுக்கு கதை எழுதியிருக்கிறாரே என எதிர்பார்த்து சென்றால் மிகுந்த ஏமாற்றத்தையே இதில் கொடுத்து இருக்கிறார்கள். பல எதிர்பார்க்காத நட்சத்திரங்களை படத்திற்குள் கொண்டுவந்து பரபரப்பை கூட்டிய இயக்குனர் தனஞ்செய் சங்கர், அவர்களை சரியான திரைக்கதையால் ஒன்றிணைக்க முடியாமல் கோட்டை விட்டிருக்கிறார்.

நடிகர் திலீப் ஒரு வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்தபோது வெளியான அவரது ராம்லீலா திரைப்படம் 100 கோடி வசூலித்து வெற்றி வாகை சூடியது. ஆனால் சமீபத்தில் தான் அந்த வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ள திலீப்புக்கு இந்த ப ப ப திரைப்படம் எந்த பரிசையும் கொடுக்கவில்லை என்பது ஏமாற்றம் தான்.

ப ப ப : படத்தில் பில்ட் அப் இருக்கலாம்.. பில்ட் அப்பே படமாக இருந்தால்.. ?



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !