உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 600 ஆண்டுகள் பழமையான வாமன கல்

600 ஆண்டுகள் பழமையான வாமன கல்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே வயல்வெளியில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய வாமன கல் கிடைத்தது. திருநெல்வேலி அருகே சுமார் பத்து கி.மீ.,துாரத்தில் தாமிரபரணியின் நீர்ப்பாசன பகுதியில் அமைந்துள்ள காட்டாம்புளி, பாலாமடை கிராமங்கள். அங்கு சமீபத்தில் குளம் சீரமைக்கும் பணி நடந்தது.  இதில் மண்ணில் புதைந்து கிடந்த எல்லைக்கல்லை வெளியே எடுத்தனர். அதில் ஒருவர் இடது கையில் கமண்டலமும், வலது கையில் வாமன குடையுடனும் இருப்பது போல உள்ளது.

இத்தகைய நடுகற்கள், கோயில் நிலங்களின் எல்லைகளை பிரிப்பதற்காக அமைக்கப்படுவது எனவும், சிவன் கோயில் நிலங்களின் எல்லை கல் என்றால் சூலக்கல் எனவும், வைணவ கோயிலின் எல்லை கல் என்றால் வாமனக்கல் நடப்படுவதும் வழக்கம் என வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கல் கிடைத்த இடத்திற்கு அருகில் சுடலைமாடசாமி கோயிலும், இசக்கியம்மன் கோயிலும் தான் உள்ளன. திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளியிடம் கேட்டபோது, அந்த கல்லின் படங்களை் பார்த்தேன். இத்தகைய கற்களில் வழக்கமாக புடைப்பு சிற்பங்கள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த கல்லில் மேலோட்டமாக உள்ளது. தொன்மையானதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !