அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அனுமதி பெற அதிகாரிகள் அலட்சியம்!
அயோத்தியாபட்டணம் : சேலம், அயோத்தியாபட்டணம் கோதண்டராமஸ்வாமி கோவிலில் திருப்பணிகள், 80 சதவீதம் அளவுக்கு முடிவடைந்து விட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான துறை ரீதியான அனுமதியை வாங்கித் தருவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம், அயோத்தியாபட்டணம் கோதண்ட ராமஸ்வாமி கோவில், 400 ஆண்டு பழமையானது. இந்த கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த, தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, மாணிக்கம் தலைமையில் திருப்பணிக்குழுவும் அமைக்கப்பட்டது. இதில், கோவிலின் ராஜகோபுரத்தை திருப்பணி செய்ய இந்து சமய அறநிறைலயத்துறை, 8.25 லட்சம் ஒதுக்கீடு செய்தது. மக்களிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டு, மொத்தம், 18.25 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுர பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டது. திருத்தேர் புனரமைப்புக்காக துறை சார்பில், 5.47 லட்சம் வழங்கப்பட்டது, பொதுமக்கள் நன்கொடையும் சேர்த்து மொத்தம், 21.90 லட்சம் செலவில் திருத்தேர் பணிகள், 75 சதவீதம் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இதே போல், 3.5 லட்சம் செலவில் நன்கொடையாளர் மூலம் கொடிமரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொடி மரத்தின் அனைத்து பணிகளும் முடி வடைந்து விட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்காததால், கொடிமரம் அமைக்கும் பணிகள் தடை பட்டுள்ளது. கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், துளசிமடம், ஆஞ்சநேயர், பழிபீடம் ஆகியவற்றின் பணிகள் தற்போது, 80 சதவீதம் அளவுக்கு முடிவுக்கு வந்து விட்டது. கோவிலின் வாசல் கதவுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அது மட்டுமின்றி உள், வெளி பிரகாரங்கள் புனரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கோவிலின் திருப்பணிகள் அனைத்தும், 80 சதவீத அளவுக்கு முடிவடையும நிலையில் உள்ளது. தற்போது அதிகாரிகள் அறநிலையத்துறையிடம் அனுமதி வழங்கும் பட்சத்தில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தலாம். ஆனால், பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே அனுமதிக்கான கடிதம் அனுப்பி வைக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், பணிகள் முடிவடைய இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விடும் நிலையில், துறை அனுமதி பெற மேலும் கால அவகாசம் வழங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அதிகாரிகள் கோவில் நலனை அக்கறை கொண்டு விரைந்து அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோவிலின் நிர்வாக அதிகாரி சுதா கூறியதாவது: கும்பாபிஷேகத்துக்கு அதிகாரிகள் அனுமதி பெற மறுப்பதாக கூறப்படுவதில் முற்றிலும் உண்மை இல்லை. ராஜகோபுரத்தின் பணி மட்டுமே முழுமையாக முடிவடைந்துள்ளது. கோவிலின் உட்பகுதியில் உள்ள சன்னதிகள், உள் வெளி பிரகாரங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருப்பணிக்கு விழாக் குழுவினர் விரைந்து முடித்து தரும் பட்சத்தில், கும்பாபிஷேகத்துக்கான தேதி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். அதற்கு துறை ரீதியாக மேற் கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்வோம் என்றார்.