ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத்தேரோட்டம் இன்று (20ம் தேதி) காலை ஆறு மணிக்கு நடைபெற்றது. "பூலோக வைகுண்டம் என்று போற்றி புகழப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடக்கும் விருப்பன் திருவிழா எனப்படும் தேர்த்திருவிழா பிரசித்திப்பெற்றது. இந்தாண்டுக்கான சித்திரைத்திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 13ம் தேதி தங்க கற்பக விருட்ச வாகனம், 15ம் தேதி தங்க கருட வாகனம், நேற்று தங்கக்குதிரை வாகனம் என தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (20ம் தேதி) நடைபெற்றது. காலை ஆறு மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேர் வீதிவலம் வந்து நிலை வந்தபிறகு, மற்ற கைங்கரியங்கள் நடக்கிறது. தேரில் இருந்து நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தவுடன் மூலஸ்தான ஸேவை துவங்குகிறது.
உள்ளூர் விடுமுறை: ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்குக்கு "தடா: ஸ்ரீரங்கத்தில் நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, மாநகராட்சி கமிஷனராக இருந்த வீரராகவராவ், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பிளாஸ்டிக் குப்பைகள் வழங்கினால் தங்கக்காசு பரிசு வழங்கினார். மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணிகள், பிரசாரங்கள் மூலம், ஸ்ரீரங்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே குறைந்து, பிளாஸ்டிக் குப்பைகள் கட்டுப்படுத்தப்பட்டது. அதன்பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மாநகராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை. ஸ்ரீரங்கம் தேரையொட்டி, "மாநகரின் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவேண்டாம். அதற்குரிய குப்பைத்தொட்டிகளில் போடவும் என்று தற்போதைய மாநகராட்சி கமிஷனர் (பொ) செல்வராஜ் பெயரில் அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
மேயர் ஆய்வு: ஸ்ரீரங்கம் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு, மாநகராட்சி மூலம் துப்புரவுப்பணி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி மேயர் ஜெயா, தேர் வலம் வரும் வீதிகளில் இப்பணிகளை நேற்று ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதவாறும், சுகாதாரத்தை பேணிக்காத்திடும் வகையில் குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடுவதை கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, கவுன்சிலர்கள் தமிழரசி, பெஸ்ட் பாபு, உதவி செயற்பொறியாளர் குமரேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.